தமிழ்நாட்டில் மூடுபனி எப்போது குறையும்? வானிலை ஆய்வு மைய இயக்குநர் சொன்னது என்ன?

தமிழ்நாட்டில் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதால் இன்னும் ஐந்து நாட்களுக்குள் பனியின் தாக்கம்‌ குறையும் என்று வானிலை ஆய்வு மைய இணை இயக்குனர் பாலச்சந்திரன் கூறினார்.

சென்னை அடுத்த தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் 3500 பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதனை தென்மண்டல வானிலை ஆய்வு மைய இணை இயக்குனர் பாலச்சந்திரன் பார்வையிட்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார். சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு கண்காட்சியில் பரிசுகள் வழங்கப்பட்டது.

அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடும் மூடு பனி நிலவுவது குறித்து அவர் பதில் அளிக்கையில், “ஜனவரி பிப்ரவரி மாதங்களில் குளிர்கால மாதங்கள் என்று சொல்வோம். பிப்ரவரி மாதத்தை பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி உள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி உள்ளது. ஒரே நாளில் குறைந்தபட்ச வெப்ப நிலைக்கும் அதிகபட்ச வெப்ப நிலைக்கும் வித்தியாசம் 10 டிகிரி உள்ளது.

பகல் நேரங்களில் நீர் நிலைகளில் மற்றும் தாவரங்களிலிருந்து நீர் ஆவியாக கூடிய சூழ்நிலையை பார்க்கிறோம். இரவு நேரங்களில் மேகங்கள் அற்ற சூழ்நிலை இருக்கும் பொழுது வெப்பநிலை 21 டிகிரியாக மாறும்பொழுது நீர் துளிகள் காற்றில் உள்ள தூசிகளில் படிந்து காற்றின் வேகமும் இல்லாததால் இதுபோன்று மூடு பனி உருவாகிறது. அதிகபட்ச வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து கொண்டு வருவதால் இன்னும் ஐந்து நாட்களுக்குள் தமிழகத்தில் மூடு பனி குறையும்.

வெயிலை பொருத்தவரைக்கும் தமிழகத்தை மூன்று நிலைகளாக பிரிக்கலாம். கடலோரப் பகுதிகள், உள்பகுதிகள் மற்றும் மலைப்பகுதிகள்.

கடற்கரை பகுதிகளில் கடற்காற்று வீசுவதால் வெப்பநிலை குறைவாக இருக்கும். உட்புற பகுதிகளில் இந்த காற்று வீசாததால் வெப்பம் அதிகமாக இருக்கும். மலைப்பகுதிகளை பொறுத்தவரைக்கும் வெப்பம் இயல்புக்கு குறைவாக இருக்கும். அந்த வகையில் பார்க்கும் பொழுது பிப்ரவரி இறுதியில் வரும் கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்து வானிலை கணித்து அறிவிக்கப்படும்.

நிலநடுக்கம் குறித்து பேசிய அவர், “நிலநடுக்கத்தை பதிவேடு செய்யும் கருவிகளை மட்டுமே நாம் பயன்படுத்தி வருகிறோம். நிலநடுக்கம் வருவதற்கு முன்பாக தெளிவாக கணிக்க முடியாது. எந்தெந்த பகுதிகளில் மண்டலங்களில் பாதிப்புகள் இருக்கும் என்பது அடையாளப்படுத்தி இருக்கிறார்கள். ரிக்டர் அளவுகோலில் பாதிப்பு ஏற்படும் பொழுது வானிலை மையங்கள் அவற்றை அறிவித்துள்ளன. முன்கூட்டியே கணிப்பது இதுவரை இல்லை” என்றார்.

மேலும் அவர், “வானிலை குறித்த அறிவிப்புகளை துல்லியமாக அளிப்பது குறித்து பல்வேறு மேம்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது” எனவும் அவர் தெரிவித்தார்

முன்னதாக அறிவியல் கண்காட்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.