அகர்தலா: மொத்தம் 60 இடங்களை கொண்ட திரிபுரா சட்டப்பேரவைக்கு வரும் 16-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பாஜக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று அகர்தலாவில் வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:
பொருளாதாரத்தில் நலிந்த குடும்பங்களில் பெண் குழந்தை பிறந்தவுடன் அக்குழந்தையின் பெயரில் ரூ.50 ஆயிரத்துக்கு பத்திரம் வழங்கப்படும்.
கல்வியில் சிறந்து விளங்கும் கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி தரப்படும். பிரதமர் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் அனைத்து பயனாளிகளுக்கும் 2 இலவச எல்பிஜி சிலிண்டர் வழங்கப்படும். தகுதியுள்ள அனைத்து நிலமற்ற குடிமக்களுக்கும் நிலப்பட்டா விநியோகிக்கப்படும். பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள அனைவருக்கும் 2025-க்குள் வீடு கட்டித் தரப்படும்.
5 ரூபாய்க்கு மூன்று வேளை சமைத்த உணவு வழங்க கேன்டீன்கள் திறக்கப்படும். கல்வியில் சிறந்து விளங்கும் 50 ஆயிரம் கல்லூரி மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன்கள் வழங்கப்படும்.
ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்துக்கான ஆண்டு வரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக இரட்டிப்பாக்கப்படும். ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்துவீடுகளுக்கும் 2024-ம் ஆண்டுக்குள் குடிநீர் வழங்கப்படும். இவ்வாறு தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக அகர்தலா அருகில் உள்ள திரிபுரசுந்தரி அம்மன் கோயிலில் ஜே.பி.நட்டா வழிபட்டார். திரிபுரா முதல்வர் மாணிக் சாகா அப்போது உடனிருந்தார்.