புதுடெல்லி: இந்திய நீதித் துறையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் பயன்பாடு ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி ஹிமா கோஹ்லி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது. நீதித் துறையில் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டை அச்சுறுத்தலாக கருதக்கூடாது. அது, சட்ட நடைமுறையின் தரத்தை உயர்த்தும் வாய்ப்பாக கருதப்பட வேண்டும். எனவே, செயற்கை நுண்ணறிவு ஒட்டுமொத்த இந்திய நீதித் துறையில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தும். குறிப்பாக, சட்டத் துறையில் பொறுப்புணர்வு, வெளிப்படைத் தன்மை, மனுதாரர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு மிக முக்கிய வலுவான பங்களிப்பை வழங்கும்.
கரோனா பேரிடரின் போதும் அதற்கு பிறகான காலகட்டங்களிலும் நீதித் துறையின் செயல்பாட்டுக்கு தொழில்நுட்பம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதை யாரும் மறுத்துவிட முடியாது. நீதித் துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வருகையால் தங்களின் நிபுணத்துவம், திறன்கள் ஆகியவை தேவையாற்றதாகி விடும் என்று வழக்கறிஞர்கள் அஞ்சலாம். ஆனால் என்னைப் பொருத்தவரை அதனை அச்சுறுத்தலாக பார்க்கவில்லை. நீதி பரிபாலனையின் தரத்தை உயர்த்தும் ஒரு வாய்ப்பாகவே ஏஐ தொழில்நுட்பத்தைப் பார்க்கிறேன்.
வழக்கறிஞர்கள் தங்களது சிக்கலான பணிகளில் கவனம் செலுத்த அதிக நேரத்தையும், தேவையான சிந்தனை இடைவெளியையும் வழங்க இந்த தொழில்நுட்பம் பெரிதும் உதவும். இவ்வாறு அவர் கூறினார்.