சென்னை: நெசவாளர்களுக்கான முத்ரா கடன்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்களில், கடந்த 6 ஆண்டுகளாக தமிழகம் தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்து வருகிறது.
நெசவாளர்களுக்கான முத்ரா கடன் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2016 ஜுன் மாதம் தொடங்கியது. இந்த திட்டத்தின் மூலம், தொழில்மூலதனம், நெசவு இயந்திரம் வாங்குதல் உள்ளிட்ட நெசவுத் தொழில் தொடர்பான பணிகளுக்காக சலுகைக் கடன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதன்படி, தனிப்பட்ட நெசவாளர்களுக்கு அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம், நெசவாளர் அமைப்புகளுக்கு ரூ.20 லட்சம் மானியக் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு 6 சதவீதம் வட்டி வசூலிக்கப்படும். தகுதி வாய்ந்த நெசவாளர்களுக்கு, 3 ஆண்டுகளுக்கு வட்டிச் சலுகை வழங்கப்படும்.
இந்நிலையில், கடந்த 6 ஆண்டுகளாக முத்ரா கடன் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்களில் தமிழகம் தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது. இதுகுறித்து மாநில அளவிலான வங்கியாளர் குழும அதிகாரிகள் கூறியதாவது:
நெசவாளர்கள் புதிதாக தொழில் தொடங்கவும், ஏற்கெனவே செய்து வரும் தொழிலை விரிவுபடுத்துவதற்காகவும் முத்ரா கடன் திட்டம் உதவுகிறது. இதில், குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் கடந்த 6 ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது.
6 ஆண்டுகளில் ரூ.508 கோடி
தமிழகத்தில் இந்த திட்டத்தின் கீழ் கடந்த 2016-17-ல் ரூ.82.38 கோடி, 2017-18-ல் ரூ.90.12 கோடி, 2018-19-ல் ரூ.112 கோடி, 2019-20-ல் ரூ.87.32 கோடி, 2020-21-ல்ரூ.70.15 கோடி, 2021-22-ல் ரூ.65.70 கோடி அளவுக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 6 ஆண்டுகளில் ரூ.508 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் அதிகமாகும்.
கடந்த 2022-23-ல் முத்ரா திட்டத்தின் கீழ் 15 ஆயிரம் நெசவாளர்களுக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கடந்த ஆண்டு அக்.31-ம் தேதி வரை 11,508 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 6,377 விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, 6,373 நெசவாளர்களுக்கு ரூ.31.08 கோடிகடன் வழங்கப்பட்டது. மேலும், நிலுவையில் உள்ள விண்ணப்பங்களையும் பரிசீலனை செய்து, விரைவாக கடன் வழங்குமாறு வங்கி களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், நெசவாளர்களுக்கு அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை கடன் தொகையை உயர்த்தி வழங்குமாறும் வங்கிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.