Doctor Vikatan: ஒல்லியாக இருப்பவர்களுக்கும் கொலஸ்ட்ரால் அதிகமிருக்கும் என்பது உண்மையா? உடல் பருமனுக்கும் கொலஸ்ட்ராலுக்கும் தொடர்பில்லையா? ஒல்லியாக உள்ளவர்கள் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்துவது எப்படி?
பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபி
முதலில் கொலஸ்ட்ரால் என்பது என்ன என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். நம் உடலுக்கு கொலஸ்ட்ரால் என்பது மிக முக்கியம். கொலஸ்ட்ரால் என்ற வார்த்தையைக் கேட்டாலே பலருக்கும் ஒருவித பயம் ஏற்படுகிறது. ஒவ்வொருவரின் உடலிலும் குறிப்பிட்ட அளவு கொலஸ்ட்ரால் இருக்க வேண்டியது அவசியம். அது எந்த வகையான கொலஸ்ட்ரால் என்பது தான் மிக முக்கியம்.
கொலஸ்ட்ராலில் பல வகைகள் உண்டு. அவற்றில் மிகவும் கெட்ட கொலஸ்ட்ரால், இதயம் மற்றும் ரத்த நாளங்களுக்காக மட்டும் உள்ள மோசமான கொலஸ்ட்ரால், உடலுக்குத் தேவையான, நமக்குப் பாதுகாப்பை அளிக்கும் கொலஸ்ட்ரால் என பல வகை உண்டு. மருத்துவ மொழியில் எல்டிஎல், ஹெச்டிஎல், டிரைகிளிசரைடு, விஎல்டிஎல், கைலோமைக்ரான் என கொலஸ்ட்ரால் வகையைப் பட்டியலிடலாம்.
இவற்றில் டிரைகிளிசரைடு எனப்படும் கொழுப்பும், எல்டிஎல் எனப்படும் கொலஸ்ட்ராலும் நம் உடலில் அதிகம் இருக்கக்கூடாது. ஹெச்டிஎல் வகை கொலஸ்ட்ரால் தேவையான அளவு இருக்க வேண்டியது அவசியம். கொலஸ்ட்ரால் இல்லாவிட்டால் நம் உடலில் எந்த அசைவும் சாத்தியமில்லை.
மூளை, இதயம், சருமம் உள்ளிட்ட உடல் உறுப்புகளுக்கும், இனவிருத்திக்கும் கொலஸ்ட்ரால் மிக முக்கியம். ஒல்லியானவர்களுக்கு கொலஸ்ட்ரால் இருக்காது, பருமனானவர்களுக்குத்தான் இருக்கும் என்றெல்லாம் நினைக்க வேண்டாம். கொலஸ்ட்ரால் நம் உடலில் எப்படிப்பட்ட நிலையில் இருக்கிறது, அதாவது அது நம் உடலிலேயே தேங்கிவிடுகிறதா அல்லது செலவழிக்கப்படுகிறதா என்பதைப் பொறுத்தது அது. ஒல்லியான உடல்வாகு கொண்டவர்களுக்கும் அவர்களது வளர்சிதை மாற்றச் செயல்பாடு காரணமாக, கொலஸ்ட்ரால் அளவு உடலில் அதிகமிருக்கலாம். பருமனானவர்களுக்கு கொலஸ்ட்ரால் அளவு சரியாகவும் இருக்கலாம்.
இந்த அளவானது அவ்வப்போது மாறக்கூடியது. நம் உணவுப்பழக்கம் மற்றும் உடலியக்கத்தைப் பொறுத்து கூடவோ, குறையவோ செய்யும். எனவே ஒருவரது தோற்றத்துக்கும் அவரது உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவுக்கும் தொடர்பில்லை. ஆரோக்கியமான உணவுப்பழக்கம் மற்றும் உடற்பயிற்சிகளின் மூலம் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கவும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும் முடியும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.