கடலூர்: கடலூர், செல்லாங்குப்பத்தில் குடும்பத்தோடு தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. கடலூர் முதுநகர் வெள்ளிப்பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர்கள் பிரகாஷ் (31)-தமிழரசி (29) தம்பதி. இவர்களது 6 மாத கைக்குழந்தை ஹாசினி. தமிழரசியின் தங்கை தனலட்சுமி(24), தேவனாம்பட்டினத்தை சேர்ந்த சற்குரு(26)வை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு லக்சன் என்ற 9 மாத கைக்குழந்தை இருந்தது. இந்நிலையில் கணவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதால் தம்பதிக்குள் மோதல் வந்துள்ளது. இதையடுத்து, தனலட்சுமி தனியாக வசித்துள்ளார். இதனால், சற்குரு அவரிடம் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால் தனலட்சுமி விவாகரத்து தர மறுத்துள்ளார்.
இதையடுத்து அவர், தாய் செல்வி (45), குழந்தை லக்சனுடன் அக்கா வீட்டுக்கு சென்றார். இவர்களை பின் தொடர்ந்து சென்ற சற்குரு, அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் வீட்டின் கதவை சாத்தி உட்புறம் தாழ்ப்பாள் போட்டு, மறைத்து வைத்திருந்த கேனில் இருந்த பெட்ரோலை அவர்கள் மீது ஊற்றியுள்ளார்.அவர் தீவைப்பதற்குள் அடுப்பில் எரிந்து கொண்டிருந்த தீப்பொறி பறந்து தனலட்சுமி, செல்வி, தமிழரசி, லக்சன், ஹாசினி, சற்குரு ஆகிய 6 பேர் மீதும் தீப்பற்றியது. இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் தமிழரசி, கைக்குழந்தைகளான ஹாசினி, லக்சன் ஆகியோர் கருகி பலியாகினர்.
கடலூர் சிப்காட் தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்து, உயிருக்கு போராடிய செல்வி, சற்குரு, தனலட்சுமி ஆகியோரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சற்குருவும் தனலட்சுமியும் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த செல்வி மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இருப்பினும் 90 சதவீதம் தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த செல்வி, இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.