விரைவு ரெயில் ஒன்றின் முன்பதிவுப் பெட்டியில் டிக்கெட் எடுக்காமல் அமர்ந்து கொண்டு இறங்க மறுத்த வடமாநிலத் தொழிலாளர்கள் 110 பேர், சேலம் அருகே நடுவழியில் போலீசாரால் இறக்கிவிடப்பட்டனர்
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து ஞாயிற்று கிழமை காலை புறப்பட்ட எர்ணாகுளம்- டாடா நகர் விரைவு ரயில்,
போத்தனூர், திருப்பூர், ஈரோடு வழியாக நேற்று பகல் 2.50 மணிக்கு சேலம் ஜங்சன் ரயில் நிலையம் வந்தடைந்தது.
ரயிலின் முன்பதிவு பெட்டியில் பயணச்சீட்டு இல்லாமலும், முன்பதிவு செய்யாமலும், ரெயிலுக்காக காத்திருந்த வடமாநில தொழிலாளர்கள் பலர் ஏறி அமர்ந்திருந்தனர்.
சேலத்தை அடுத்த கருப்பூர்-தின்னப்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் சென்று கொண்டிருந்த போது முறைப்படி முன்பதிவு செய்த பயணிகளுக்கு அமர இருக்கை இல்லாததால், இருக்கையை ஆக்கிரமித்திருந்த வட மாநில தொழிலாளர்களுக்கும் , முன்பதிவு செய்த பயணிகளுக்கும் தகராறு ஏற்பட்டது
இதைத்தொடர்ந்து பயணச்சீட்டு பரிசோதகர்கள், சேலம் ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கும், சேலம் ரயில் நிலைய போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர். ரயில்வே கோட்ட அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த ரயில் தின்னப்பட்டி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. சேலம் கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படை உதவி கமிஷனர் ரத்தீஷ் பாபு, இன்ஸ்பெக்டர் ஸ்மித், சேலம் ரயில் நிலைய இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் உள்ளிட்டோர் தின்னப்பட்டி ரயில் நிலையம் வந்தனர்.
ரயில்வே பாதுகாப்பு படையினர், சேலம் ரயில் நிலைய போலீஸார், டாடா நகர் விரைவு ரயிலில் குறிப்பிட்ட முன்பதிவு பெட்டியில் இருந்த சுமார் 90 ஆண்கள்,
25 பெண்கள் என மொத்தம் 110- க்கும் மேற்பட்ட வட மாநில வித் அவுட் பயணிகளை பெட்டி படுக்கையுடன் கீழே இறக்கிவிட்டனர். இவர்கள் ஜார்கண்ட் மற்றும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்
ரெயிலில் முன்கூட்டி வந்து அமர்ந்து கொண்டால் இருக்கையில் பயணிக்க முடியாது என்றும், இதுபோன்ற முன்பதிவு பெட்டியில் பயணிக்க முன்பதிவு செய்து பயணச்சீட்டு பெற்றிருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினர்.
இந்த பிரச்னை காரணமாக டாடா நகர் எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் ஒன்றரை மணி நேர தாமதத்திற்குப் பிறகு புறப்பட்டு சென்றது. இதனால், மற்ற பயணிகள் அவதிக்குள்ளாயினர்
இதனிடையே கீழே இறக்கிவிடப்பட்ட வித் அவுட் பயணிகள், ஈரோட்டில் இருந்து ஜோலார்பேட்டை செல்லும் பயணிகள் ரயிலில் பயணச்சீட்டு எடுக்க வைத்து ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.
எப்போதாவது யாரோ ஒருவர் வித் அவுட்ன்னா பரவாயில்லை… எப்பவுமே எல்லாரும் வித் அவுட்டுன்னா எப்படி ? என்பதே ரெயிலில் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளின் ஆதங்கமாக உள்ளது