சர்வதேச விமான கண்காட்சியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி : ரூ.75,000 கோடி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்ப்பு!!

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள எலஹங்கா விமானப்படை தளத்தில் 14வது ஏரோ இந்தியா சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை சர்வதேச விமான கண்காட்சி மற்றும் சாகசம் நடந்து வருகிறது. கடந்த முறை நடந்த விமான கண்காட்சியின் மூலமாக பல லட்சம் கோடி வர்த்தகம் நடந்தது. அது போல் எச்ஏஎல் தயாரித்த இலகு ரக ஹெலிகாப்டர், தேஜஸ் உள்ளிட்ட விமானங்களின் சாகசத்தை பல லட்சம் பேர் கண்டு களித்தனர். இந்த நிலையில், 14வது ஏரோ இந்தியா சர்வதேச விமான கண்காட்சியை தேசிய கொடியை அசைத்து பிரதமர் நரேந்திர மோடி, தொடங்கி வைத்தார்.தொடர்ந்து, வானில் போர் விமானங்கள் சாகசங்களில் ஈடுபட்டதை கண்டு கழித்தார்.  

ஆசியாவின் மிகப் பெரிய விமான கண்காட்சியான இதில் பெல், பிஇஎம்எல், எச்.ஏ.எல். உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் புதிய கண்டு பிடிப்புகள், கனரக மற்றும் ராணுவ தளவாடங்களும் இடம் பெற்றுள்ளன.
இந்த கண்காட்சியில் இந்திய போர் விமானங்கள் மட்டுமல்லாமல் அமெரிக்கா, ஜெர்மன், ரஷ்யா, கனடா உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த அதி நவீன போர் விமானங்களும் பங்கேற்று வானில் சாகசங்களில் ஈடுபடுகின்றன. வருகிற 17ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியின் தொடக்க விழாவில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் விமானப்படை அதிகாரிகள் பலர் பங்கேற்றுள்ளனர். இந்த விமான கண்காட்சியில் ரூ.75,000 கோடி மதிப்பிலான 251 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.