சென்னை: நாட்டின் அடிப்படை கட்டமைப்பை மாற்றி முழுவதும் வளர்ச்சியடைந்த இந்தியாவை பிரதமர் மோடி உருவாக்கியுள்ளார். அடுத்த 25 ஆண்டுகளில் உலகின் தலைமையகமாக இந்தியா உருவெடுக்கும். அதற்கு ஒவ்வொரு இந்தியரும் பங்களிக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி குறித்து ‘மோடி 20 – நனவாகும் கனவுகள்’, ‘அம்பேத்கர் மற்றும் மோடி – சீர்திருத்த சிந்தனைகள், செம்மையான செயல்பாடுகள்’ ஆகிய 2 நூல்களின் ஆங்கிலம், இந்தி பதிப்புகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின் தமிழ் பதிப்புகள் வெளியீட்டு விழா சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் விவேகானந்தர் அரங்கில் நேற்று நடந்தது.
விழாவுக்கு தலைமை வகித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, நூல்களை வெளியிட்டு பேசியதாவது: இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. நம் அனைவருக்கும் குடிநீர், சுகாதார வசதிகள் கிடைக்கின்றன. அனைவரது வீடுகளிலும் கழிவறை வசதி உள்ளது. இத்தகைய மாற்றங்களுக்கு பிரதமர் மோடியே காரணம். இந்த புத்தகங்களை படித்தால், இந்திய மக்களுக்கு செய்து தரப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
1951-ல் இருந்த விலைவாசி தற்போது இல்லை. பல மடங்கு உயர்ந்துள்ளது. எனினும், அனைவரது வாழ்க்கை தரமும் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் சமூகநீதி பற்றி பரவலாக பேசுகிறோம். ஆனால், குடிநீர் தொட்டியில் மலம் கலப்பது, கோயிலுக்குள் பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுப்பது, அங்கன்வாடியில் தரையில் அமர வைப்பது போன்ற நிகழ்வுகள் இங்கு தொடர்ந்து நடக்கின்றன. அமைதி நிலவும் சமுதாயத்தை பிளவுபடுத்த சிலர் முயற்சிக்கின்றனர். அதை சரிசெய்ய வேண்டும். முத்தலாக் தடை சட்டம் மூலம் முஸ்லிம் சகோதரிகளின் உரிமையை மீட்டு சமூக நீதியை காத்தவர் பிரதமர் மோடி.
இந்தியா ஒரே குடும்பம். அனைவருக்குமான வளர்ச்சியை பிரதமர் மோடி வழங்கி வருகிறார். சிலர் என்ன மாடல் என்றே தெரியாமல், பல மாடல்களை சொல்கின்றனர். ஆனால், நாட்டின் அடிப்படை கட்டமைப்பை மாற்றி முழுவதும் வளர்ச்சியடைந்த இந்தியாவை பிரதமர் மோடி தற்போது உருவாக்கியுள்ளார். உலக நாடுகள் மத்தியிலும் இந்த மாற்றம், எழுச்சி முக்கிய தாக்கத்தை உருவாக்கப்போகிறது. அடுத்த 25 ஆண்டுகளில் உலகின் தலைமையகமாக இந்தியா உருவெடுக்கும். அதற்கு ஒவ்வொரு இந்தியரும் பங்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசும்போது, “மத்திய அரசின் உதவிகள் நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகின்றன. இதன்மூலம் ரூ.2 லட்சம் கோடி மீதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பெருமை பிரதமரை சாரும்” என்றார். விழாவில், சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி, அண்ணா பல்கலை. துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ், தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவப் பல்கலை. முன்னாள் துணைவேந்தர் சுதா சேஷய்யன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.