ஒரு கிலோ நெல்லை அரசாங்கத்தின் ஊடாக நூறு ரூபா வீதம் உத்தரவாத விலையில் கொள்வனவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இலங்கைக்கு உணவு வழங்கக்கூடிய மாகாணமாக வட மாகாணமும் யாழ்ப்பாண மாவட்டமும் அபிவிருத்தி செய்யப்படும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் பரந்தன் வயல்வெளியில் நடைபெற்ற வடக்கு நெல் அறுவடை செய்யும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.
பரந்தன் வயல்வெளிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, அங்குள்ள விவசாயிகளிடம் நெற்செய்கை தொடர்பான பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டதுடன், அப்பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மேலும் கூறியதாவது,
விவசாயிகளுக்கு தேவையான உரங்களை அரசாங்கம் துரிதமாக வழங்கியது. எனவே, இம்முறை பெரும் போகத்தில் மேலதிக நெல் அறுவடை கிடைக்கும் என நம்புகிறோம்.அதற்கமைய ஒரு கிலோ நெல்லை 100 ரூபா உத்தரவாத விலைக்கு அரசாங்கத்தின் ஊடாக கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இன்று பலர் பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகின்றனர். விளைச்சல் அதிகரித்தாலும் அரிசி வாங்குவதற்கு பொருளாதார பலம் இல்லாத பிரிவினர் உள்ளனர். எனவே, மார்ச், ஏப்ரல் மாதங்களில் இருபது இலட்சம் குடும்பங்களுக்கு 10 கிலோ கிராம் அரிசியை இலவசமாக வழங்கும் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறோம். சிங்கள-தமிழ் புத்தாண்டு காலப்பகுதியாகும் போது அவர்களுக்கு 20 கிலோ அரிசி கிடைத்திருக்கும்.
தற்போது ஒரு ஹெக்டெயாருக்கு சுமார் 03 மெட்ரிக் தொன் நெல் அறுவட கிடைக்கிறது. நாம் செயல்படுத்தி வரும் விவசாயத்தை நவீனமயமாக்கும் திட்டத்தின் மூலம் ஒரு ஹெக்டெயாருக்கு குறைந்தது ஆறு மெட்ரிக் தொன் அறுவடை பெற வேண்டும். முடியுமானால் அதனை 7 மெட்ரிக் தொன்களாக உயர்த்த எதிர்பார்க்கிறோம். அந்த முன்னேற்றத்தை அடைய தேவையான வசதிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. நெல் கொள்முதல் செய்து சேமித்து வைக்கும் முறைகள் பின்னர் உருவாக்கப்படும். சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலைகளை நிறுவ எதிர்பார்க்கிறோம். அடுத்த இரண்டு வருடங்களில் அந்த செயற்பாடுகளை நிறைவு செய்ய முடியும். இப்பகுதிக்கு தேவையான நீர் வசதிகளை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்.பூனகரி ஏரியை மீளப் புனரமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இரணைமடு ஏரி தற்போது தயார் செய்யப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்டத்தையும் வடமாகாணத்தையும் மீண்டும் நாட்டிற்கு உணவளிக்கும் அளவுக்கு அறுவடை செய்யக்கூடிய மாகாணமாக மாற்றுவதற்கு நாம் செயற்பட்டு வருகின்றோம். இதற்கு மேலதிகமாக கால்நடை தீவன உற்பத்தியை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க எதிர்பார்க்கிறோம் என்றும் தெரிவித்தார்.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன், பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன மற்றும் வடமாகாண அரச அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் கிளிநொச்சி பன்னம்கட்டி கிராம வயல்வெளிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அங்குள்ள விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்ததோடு அவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
பெருந்தொகையான பிரதேச மக்கள் ஜனாதிபதியைக் காணச் சுற்றிலும் கூடியிருந்ததோடு அவர்களின் தகவல்களைக் கேட்டறியவும் ஜனாதிபதி மறக்கவில்லை. அங்கிருந்த சிறுபிள்ளைகள் மத்தியில் சென்று அவர்களின் கல்விச் செயற்பாடுகள் தொடர்பிலும் அவர் கேட்டறிந்தார்.
President’s Media Division