புவி வெப்பமயமாதல் தன் வேலையைக் காட்டத் துவங்கிவிட்டது…
உஷ்ண நாடுகளில் பனி பெய்கிறது, வழக்கமாக பனி பெய்யும் நாடுகளில் பனியைக் காணவில்லை. பனி இல்லாததால் பனிச்சறுக்கு விளையாட்டு மையங்கள் என்ன செய்வதென திகைத்துப்போயுள்ளன.
சுவிட்சர்லாந்தில் பாலைவனத்தாவரங்கள்
பனி பெய்யும் சுவிட்சர்லாந்தில் பாலைவனத்தாவரங்கள் பெருகி, அவற்றை ஒழிக்க நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. சில சப்பாத்திக்கள்ளித் தாவரங்களால் குளிர் பிரதேசங்களில் வளர முடியும் என்றாலும், சுவிட்சர்லாந்தில் சப்பாத்திக்கள்ளி வளர்ந்து பாலைவனம்போல் காட்சியளிப்பதை கற்பனைகூட செய்துபார்க்கமுடியவில்லை.
அத்துடன், தற்போது சுவிட்சர்லாந்தில் வளரும் சப்பாத்திக்கள்ளி, வறட்சியான, வெப்பமான பருவநிலையில் வளரும் Opuntia என்னும் வகை சப்பாத்திக்கள்ளிதான் என்பதை அறிவியலாளர்கள் உறுதி செய்துள்ளார்கள்.
பெருவெள்ள அபாயம்
இதற்கிடையில், மேலும் ஒரு கெட்ட செய்தியை அளித்துள்ளது புவி வெப்பமயமாதல்.
ஆம், சுவிட்சர்லாந்துக்கு பெருவெள்ள அபாயம் உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, பனிப்பாறைகள் உருகும்போது அவற்றின் அடியில் ஏரிகள் உருவாகும். அதிக நீர் மற்றும் நிலத்தின் நிலைத்தன்மையின்மை ஆகியவை இணைந்து இந்த ஏரிகள் உடைந்து பெருவெள்ள அபாயம் ஏற்படக்கூடும் என ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.
இந்த நிகழ்வால், சுவிட்சர்லாந்தில் வாழும் சுமார் 700,000 பேர் பாதிக்கப்படக்கூடும் என்கிறது அந்த ஆய்வு.
புவி வெப்பமயமாதலின் விளைவால், ஒரு பக்கம் வெப்பம், மறுபக்கமோ வெள்ளம் என உலகம் தவிக்கத் துவங்கிவிட்டதை சமீபத்தில் வெளியாகிவரும் செய்திகள் தொடர்ந்து வெளிப்படுத்திவருகின்றன.
image – Longo68 | Dreamstime.com