கள்ளக்குறிச்சியில் பழைய இரும்பு கடையில் ஏற்பட்ட தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சியை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் சுந்தர விநாயகர் கோவில் தெரு பகுதியில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று முந்தின இரவு கடையை பூட்டிவிட்டு முத்துக்குமார் வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து நேற்று காலை ஐந்தரை மணியளவில் இரும்பு கடையில் தீப்பிடித்து எரிந்துள்ளது.
இதைப் பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் அதிர்ச்சியடைந்து இதுகுறித்து கள்ளக்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மேலும் கடை முழுவதும் தீப்பிடித்து எரிந்ததால், ரூபாய் பத்து லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் நாசமானது. இந்த தீ விபத்தினால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கள்ளக்குறிச்சி போலீசார், பழைய இரும்பு கடையில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.