ஆஸ்திரேலிய அணியில் கூடுதலாக ஒரு சுழற்பந்து வீச்சாளர் சேர்ப்பு

புதுடெல்லி,

சுழற்பந்து வீச்சாளர்

நாக்பூரில் நடந்த இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் தோல்வியை தழுவியது. அதுவும் அஸ்வின், ஜடேஜாவின் சுழல் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 3-வது நாளிலேயே ‘சரண்’ அடைந்தது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 17-ந்தேதி டெல்லியில் தொடங்குகிறது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு புதுமுக இடக்கை சுழற்பந்து வீச்சாளர் மேத்யூ குனேமேன் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளார். அணியில் இடம் பெற்றுள்ள சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்வெப்சன் தனது மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் விரைவில் தாயகம் திரும்புகிறார். இதை கருத்தில் கொண்டு குனேமேன் அழைக்கப்பட்டு உள்ளார்.

குனேமேன் இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டிலேயே விளையாட வாய்ப்பிருப்பதாக அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு நேற்று தெரிவித்தார்.

‘நாங்கள் 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாட முடிவு செய்தால், இன்னொரு மாற்று சுழற்பந்து வீச்சாளர் இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம். அதனால் தான் அவரை அழைத்துள்ளோம். விரலில் காயமடைந்த ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன் அதில் இருந்து மீண்டு இருப்பார் என்று நம்புகிறோம். விரலில் காயமடைந்த பகுதி எப்படி இருக்கிறது என்பதை அறிய கடைசி எக்ஸ்ரே எடுக்க உள்ளார். அவர் வந்து விட்டால், அணியில் சில மாற்றங்களை செய்ய வாய்ப்பு கிடைக்கும். வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இப்போது தான் அணியுடன் இணைந்துள்ளார். இன்று அவர் பயிற்சியை தொடங்குவார். கணுக்கால் பகுதியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து ஹேசில்வுட் இன்னும் முழுமையாக மீளாததால் 2-வது டெஸ்டிலும் விளையாடமாட்டார்’ என்றும் மெக்டொனால்டு குறிப்பிட்டார்.

‘இன்ப அதிர்ச்சி’

26 வயதான குனேமேன் 13 முதல்தர கிரிக்கெட்டில் விளையாடி 35 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். ஏற்கனவே 4 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 6 விக்கெட் எடுத்துள்ளார். அவர் கூறுகையில், நேற்று முன்தினம் காலையில் நடைபயிற்சிக்கு பிறகு சில பயிற்சிகளை செய்து கொண்டிருந்த போது போனில் எனக்கு தகவல் வந்தது. உண்மையிலேயே இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அதிர்ஷ்டவசமாக எனது பாஸ்போர்ட் தயாராக இருந்தது.

நாக்பூர் டெஸ்டின் ஒவ்வொரு ஆட்டத்தையும் ஒரு ரசிகராக கண்டு களித்தேன். டாட் மர்பியின் பந்துவீச்சு அற்புதமாக இருந்தது. ஜடேஜா எப்படி பந்து வீசினார் என்பதை உன்னிப்பாக கவனித்தேன். அணியில் வாய்ப்பு கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.