1,386 கி.மீ. தூரத்தை 12 மணி நேரத்தில் கடக்கலாம் டெல்லி-மும்பை இடையே ரூ.1 லட்சம் கோடியில் அதிவிரைவுச்சாலை சிறப்பு அம்சங்கள் குறித…

நாட்டின் முன்னேற்றத்துக்கு அடித்தளமாக அமைவது உள்கட்டமைப்பு வசதிகள்தான்.

அதனால்தான் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக அடுத்த நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ரூ.1 லட்சம் கோடியில் சாலை

உள்கட்டமைப்பு வசதிகளில் சாலைகளுக்கு முக்கிய இடம் உண்டு.

அந்த வகையில், அதிவிரைவுச்சாலை என்றால் அது இதுதான் என்று சொல்லத்தக்க வகையில், ஒரு அதிவிரைவுச்சாலை இந்தியாவில் வருகிறது.

அந்த அதிவிரைவுச்சாலையானது, நாட்டின் தலைநகரான டெல்லியையும், பொருளாதார தலைநகரான மும்பையையும் இணைக்கும் வகையில் அமைக்கப்படுகிறது. இந்த சாலை அமைப்பதற்கான பட்ஜெட் எவ்வளவு தெரியுமா? ரூ.1 லட்சம் கோடி!

பிரதமர் மோடியின் கனவுத்திட்டங்களில் இதுவும் ஒன்று என்று சொல்லப்படுகிறது.

நாட்டிலேயே நீளமானது…

இந்த அதிவிரைவுச்சாலையில் அப்படி என்னதான் சிறப்பு என்கிறீர்களா? இதோ….

* டெல்லி-மும்பை மாநகரங்களுக்கு இடையேயான 1,386 கி.மீ. தொலைவில் அமையப்போகும் இந்த சாலைதான், இந்தியாவின் மிக நீளமான அதிவிரைவுச்சாலை என்ற பெயரைப் பெறும்.

* இந்த அதிவிரைவுச்சாலை டெல்லி, அரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், மராட்டியம் ஆகிய 6 மாநிலங்கள் மற்றும் கோட்டா, இந்தூர், ஜெய்ப்பூர், போபால், வதோதரா, சூரத் இடையே செல்லும்.

* இந்த சாலைக்காக டெல்லி, அரியானா, ராஜஸ்தான், குஜராத், மராட்டிய மாநிலங்களில் 15 ஆயிரம் ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக நிலங்களை வழங்கியுள்ள விவசாயிகளுக்கு சந்தை விலையை விட 1½ மடங்கு விலை கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

* 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.

* மழைநீர் சேகரிப்புக்கு 500 மீட்டர் இடைவெளிகளுக்கு இடையே வசதி செய்யப்படுகிறது.

10 கோடி மனித வேலை நாட்கள்

* இந்த சாலையை அமைப்பதற்கு 12 லட்சம் டன் உருக்கு பயன்படுத்தப்படுகிறது.

* இந்த அதிவிரைவுச்சாலை 10 கோடி மனித வேலை நாட்கள், வேலை வாய்ப்பினை உருவாக்கும்.

* டெல்லி-மும்பை அதிவிரைவுச்சாலைக்கு 80 லட்சம் டன் சிமெண்ட் பயன்படுத்தப்படும். இது இந்தியாவின் வருடாந்திர சிமெண்ட் உற்பத்தியில் 2 சதவீதம் ஆகும்.

* பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் 94 வழித்தட வசதிகள் ஏற்படுத்தப்படும்.

* டெல்லி-மும்பை அதிவிரைவுச்சாலை 8 வழி அணுகலைக்கொண்டிருக்கும். கட்டுப்படுத்தப்பட்ட பசுமைவழி விரைவுச்சாலையாக இருக்கும். இது எதிர்காலத்தில் 12 பாதைகளாக விரிவுபடுத்தப்படும்.

சாலையின் பயன்கள்

* இந்த அதிவிரைவுச்சாலை டெல்லி-மும்பை இடையேயான சாலை வழியிலான தொலைவை 12 சதவீதம் குறைக்கும். பயண நேரத்தைப் பொறுத்தமட்டில், சரிபாதியாக குறைத்து விடும். அதாவது டெல்லி-மும்பை இடையேயான தற்போதைய பயண நேரம் 24 மணி நேரம் ஆகும். இதை இந்த அதிவிரைவுச்சாலை 12 மணி நேரமாக- அதாவது சரிபாதியாக குறைந்து விடும்.

* டெல்லி-மும்பை அதிவிரைவுச்சாலை பயண தொலைவையும், நேரத்தையும் பெருமளவில் குறைப்பதின் பலனாக ஆண்டுக்கு 32 கோடி லிட்டர் எரிபொருளைச் சேமிக்க முடியும். 85 கோடி கிலோ கிராம் கார்பன்டை ஆக்சைடு உமிழ்தல் தவிர்க்கப்படும்.

* 93 பிரதம மந்திரி கதிசக்தி பொருளாதார முனைகள், 13 துறைமுகங்கள், 8 பெரிய விமான நிலையங்கள், 8 பன்மாதிரி தளவாட பூங்காக்கள், இந்த அதிவிரைவுச்சாலையால் பெரும்பயன் அடையும்.

ஒரு பிரிவு பணி முடிந்து திறப்பு

இந்த பிரமாண்ட சாலையின் ஒரு பகுதி அமைக்கப்பட்டு விட்டது. அதாவது 246 கி.மீ. தொலைவுக்கு டெல்லி- அரியானாவின் சோனா- ராஜஸ்தானின் தவ்சா இடையே ரூ.12 ஆயிரத்து 150 கோடியில் ஒரு பிரிவு அமைத்து முடிக்கப்பட்டுள்ளது.

இந்த சாலைப்பிரிவு, டெல்லிக்கும் ஜெய்ப்பூருக்கும் இடையேயான பயண நேரத்தை 5 மணி நேரத்தில் இருந்து 3½ மணி நேரமாக குறைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அதிவிரைவுச்சாலையின் பிரிவைத்தான் பிரதமர் மோடி நேற்று பொத்தானை அழுத்தி திறந்துவைத்தார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.