ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளதால், பிரச்சாரம் களைகட்டியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கு 15 நாட்களே உள்ள நிலையில், தேர்தல்பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. காலை 6 மணிக்கு வீடு, வீடாகச் சென்று பிரச்சாரத்தை தொடங்கும் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் 10 மணிவரை பிரச்சாரம் மேற்கொள் கின்றனர்.
தொடர்ந்து, தேர்தல் பணிமனையில் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபடுகின்றனர். மதிய உணவுக்கு பின்னர், சிறிது நேரம் ஓய்வெடுக்கச் செல்லும் தலைவர்கள் மீண்டும் மாலை 4 மணிக்கு தொடங்கி, 10 மணி வரை பிரச்சாரத்தை தொடர்கின்றனர்.
திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதராவாக வாக்கு சேகரிக்கும் பணியில் அமைச்சர்கள் களமிறங்கியுள்ளனர். அமைச்சர்கள் முத்துசாமி, கே.என்.நேரு, எ.வ.வேலு, சாமிநாதன், பெரியசாமி, செந்தில்பாலாஜி, செஞ்சி மஸ்தான் உள்ளிட்ட அமைச்சர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக வேட்பாளர் கே.எஸ். தென்னரசுவுக்கு வாக்கு சேகரிக்கும் வகையில், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.வி. ராமலிங்கம், கருப்பணன், விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன், முனுசாமி, செல்லூர் ராஜு, பாண்டியராஜன் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பாஜக நிர்வாகி முருகானந்தம், எம்எல்ஏ சரஸ்வதி உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் ஆகியோர் கட்சி நிர்வாகிகளுடன் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். நேற்று, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பிரச்சாரம் சூடுபிடித்தது.