காதலர் தினத்தன்று காதல் பரிசுகளை பகிர்ந்து கொள்வது வழக்கம். இந்த காதலர் தினத்தை பயன்படுத்தி சிலர் மோசடி செய்ய ஆரம்பித்திருக்கின்றனர். மும்பையை சேர்ந்த ஒரு பெண் கூரியரில் வந்த காதலர் தினப்பரிசை வாங்க நினைத்து, பணத்தை இழந்திருக்கிறார். மும்பை கார் ரோடு பகுதியில் வசிக்கும் 51 வயது திருமணமான பெண்ணுக்கு அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவருக்கு முன்பின் தெரியாத நபர் ஒருவரிடமிருந்து நட்பு கோரிக்கை வந்தது.
அந்தப் பெண்ணும் அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். இருவரும் அடிக்கடி ஆன்லைனில் சாட்டிங் செய்து கொண்டனர். இதில் இருவரும் நெருக்கமானார்கள். இதனால் அந்தப் பெண் தன் போன் நம்பரை அவருடன் பகிர்ந்து கொண்டார். இதில் இருவரும் மேலும் நெருக்கமானார்கள். இதனால் அந்தப் பெண் தன்னுடைய அந்தரங்க புகைப்படங்களையும் அவருக்கு அனுப்பி வைத்தார்.
உடனே இன்ஸ்டாகிராம் நண்பர் அந்தப் பெண்ணிடம் தான் கப்பலில் பணியாற்றுவதாகவும், காதலர் தினத்தன்று பரிசு அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தார். கூரியர் கட்டணம் ரூ.750 கொடுத்து வாங்கிக்கொள்ளும்படியும், கவரில் பணம் இருப்பதாகவும் தெரிவித்தார். சில நாள்கள் கழித்து அந்தப் பெண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது.
அதில் பேசிய நபர், கூரியர் வந்திருப்பதாகவும், அதில் பணம் இருப்பதாகவும் கூறி, அந்தப் பணத்தை வாங்க பல்வேறு வரிகள் இருப்பதாகக் கூறி பணம் கேட்டார். அந்த பெண்ணும் ஆரம்பத்தில் அவர்கள் கேட்ட பணத்தை கொடுத்தார். ஆனால் ஒரு கட்டத்தில் பணம் கொடுக்க முடியாது என்று இன்ஸ்டாகிராம் நண்பருடன் அந்தப் பெண் வாக்குவாதம் செய்தார். உடனே மர்மநபர் `என்னிடம் உன் அந்தரங்க புகைப்படம் இருப்பதாகவும் அதனை சோஷியல் மீடியாவில் வெளியிட்டுவிடுவேன்’ என்று மிரட்டினார்.
அதன் பிறகுதான் அந்தப் பெண் தான் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம் என்பதை உணர்ந்தார். இன்ஸ்டாகிராம் நண்பரிடம் ரூ.3.68 லட்சத்தை இழந்திருக்கிறார். இது குறித்து அந்தப் பெண் மும்பை கார்ரோடு போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் மோசடி வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்திருக்கின்றனர்.