பிரபல கார் நிறுவனமான ரேனால்ட் நிஸ்ஸான் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் ரூ. 5,300 கோடி மதிப்பீட்டில் ரேனால்ட் – நிஸ்ஸான் நிறுவனத்தின் ஆலை விரிவாக்கத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. `முதலீட்டாளர்களின் முகவரி தமிழ்நாடு’ என்ற பெயரில், தெற்கு ஆசியாவில் தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றவேண்டுமென்று தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த ஒப்பந்தம் இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
சென்னை எம்.ஆர்.சி நகர் தனியார் விடுதியில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தொழில்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கையெழுத்தின் மூலம், 2000 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கபடுகிறது. ஜப்பானை சேர்ந்த நிஸ்ஸான் நிறுவனமும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ரேனால்ட் நிறுவனமும் இணைந்து கூட்டாக சென்னை ஒரகடத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 610 ஏக்கரில் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு கார் சந்தைகளுக்கான கார் உற்பத்தி செய்து வருகிறது.
இதுவரை இங்கு 24 லட்சத்திற்கும் அதிகமான கார்கள் இவ்விரு நிறுவனங்களும் இணைந்து உற்பத்தி செய்திருப்பதுடன் இந்திய அளவில் 3 சதவீத கார் உற்பத்தி பங்கினை இரு நிறுவனங்களும் பெற்றுள்ளன. இந்திய சந்தையில் EV ரக கார்களுக்கு அரசு வரி சலுகைகள் அறிவித்துள்ள நிலையில், இவ்விரு நிறுவனமும் EV ரக கார் உட்பட ஆறு புதிய கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இவை அனைத்தும் வரும் 2025 ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM