நாடு புதிய உயரங்களை தொட்டு அவற்றையும் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

பெங்களூரு: நாடு புதிய உயரங்களை தொட்டு அவற்றையும் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் எலஹங்கா விமானப்படைத்தளத்தில் 14வது ஏரோ இந்தியா கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களின் சாகசங்களை வெளிநாட்டு பிரதிநிதிகள் பார்த்தனர். 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் விமான கண்காட்சி இந்தாண்டு பிப்ரவரி 17 வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. மேக் இன் இந்தியா, வெளிநாட்டு முதலீடுகள் உள்ளிட்டவற்றை மையப்படுத்தி விமான கண்காட்சி நடக்கிறது. விழாவில் பேசிய பிரதமர் மோடி, நாடு புதிய உயரங்களை தொட்டு அவற்றையும் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது.

ஏரோ இந்தியா நிகழ்ச்சி இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு. கண்காட்சியில் 100 நாடுகள் பங்கேற்றது புதிய இந்தியாவில் உலக நாடுகளின் நம்பிக்கையை குறிக்கிறது. சுமார் 100 உலக நாடுகளின் நம்பிக்கையை இந்தியா வளர்த்துள்ளது. ஏரோ இந்தியாவின் கருப்பொருள், 10 லட்சம் வாய்ப்புகளுக்கான ஓடு பாதை. நிலத்தில் தொடங்கி ஆகாயம் வரை பல்வேறு புதிய வாய்ப்புகளை அதிகரிக்கும். பாதுகாப்பில் புதிய கண்டுபிடிப்புக்கான வழியை விமான கண்காட்சி திறக்கும் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய மோடி, பாதுகாப்புத் துறையில் முன்னணியில் உள்ள நாடுகளுடன் இந்தியா கூட்டு வைத்துள்ளது. பாதுகாப்பு துறை இல்லாத நாடுகளுக்கு இந்தியா சிறந்த சகோதரனாக உருவாகி வருகிறது. கடினமான பாதுகாப்புத்துறையில் கடந்த 9 ஆண்டுகளில் நிறைய முன்னேற்றம் கண்டுள்ளோம். பாதுகாப்பு துறையில் அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டும். 2024 – 25க்குள் பாதுகாப்பு ஏற்றுமதியை 5 பில்லியன் டாலராக உயர்த்துவதே இலக்கு. இன்றைய இந்தியா வேகமாக சிந்திக்கிறது, விரைவான முடிவுகளை எடுக்கிறது என கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.