“காரைக்கால் மார்க் துறைமுகம் கடத்தலுக்குப் பயன்படுத்தப்படுகிறது!” – புதுச்சேரி அதிமுக புகார்

புதுச்சேரி அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சித் தலைவருமான அன்பழகன் இன்று தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த 2008-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் காரைக்கால் கடற்கரையோரத்தில் இருந்த சுமார் 650 ஏக்கர் அரசு நிலத்தில், துறைமுகம் அமைப்பதற்காக மார்க் என்ற தனியார் நிறுவனத்துக்கு 30 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்பட்டது. குத்தகை விடும்போதே ஆண்டுக்கு ரூ.2.6 கோடி என குறைந்த வாடகை நிர்ணயம் செய்யப்பட்டது. அந்த தொகை மிகவும் குறைவானது என்றும், சட்டத்துக்கு விரோதமானது என்றும், தனிப்பட்ட முறையில் மார்க் துறைமுகம் நிறுவனத்துக்கு சலுகை காட்டுவதற்காகவே கையூட்டு பெற்றுக்கொண்டு ஒப்பந்தம் போடப்பட்டதாக அ.தி.மு.க சார்பில் சட்டமன்றத்தில் வலியுறுத்தினோம்.

கடந்த தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது மதிப்பீட்டு மற்றும் பொது கணக்கு குழு சார்பில் துறைமுகத்தை ஆய்வு செய்தோம். அப்போது  தொடர்ச்சியாக அங்கு நடக்கும் முறைகேடுகளும், துறைமுக வருவாயை கொண்டு வேறு பல தொழில்களில் திட்டமிட்டு முதலீடு செய்வதையும் கண்டுபிடித்தோம். அந்த நிலை நீடித்தால் எதிர்காலத்தில் துறைமுகம் நடத்தமுடியாத சூழ்நிலைக்கு அந்த நிறுவனம் தள்ளப்படும் என மதிப்பீட்டு குழுவின் அப்போதைய தலைவரான நானும், பொதுக்குழுத் தலைவர் சிவாவும் பல்வேறு விசாரணைகளுக்குப் பிறகு அறிக்கை அனுப்பினோம்.

புதுச்சேரி அதிமுக கிழக்கு மாநிலச் செயலாளர் அன்பழகன்

ஆனால், அப்போது முதலமைச்சராக இருந்த நாராயணசாமி, இந்த இரண்டு குழுக்களின் அறிக்கை மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் திட்டமிட்டு மார்க் நிறுவனம் பயன்பெறும் விதத்தில் அலட்சியமாக இருந்தார். இன்று அந்த மார்க் நிறுவனம் நேர்மையற்ற முறையில் துறைமுகத்தை வைத்து 1,000 கோடி ரூபாய்க்கு மேல் கடனைப் பெற்று, அந்தக் கடனை அடைக்க முடியாத சூழலை செயற்கையாக திட்டமிட்டு உருவாக்கியிருக்கிறது. அத்துடன் தேசிய தொழிற்சாலை சட்ட வழிமுறை மூலம், கடன் பெற்றதை மறைத்து, நிறுவனத்தை நடத்த முடியவில்லை என்றும், அதனால் யாருக்கும் வேண்டுமானாலும் விற்பனை செய்து கொடுங்கள் என்றும் கூறியிருக்கிறது மார்க் துறைமுகம்.

அதனடிப்படையில் வேதாந்தா, அதானி ஆகிய இரு நிறுவனங்கள் டெண்டர் கேட்டன. அதில் வேதாந்தா நிறுவனத்தைவிட அதானி குழுமம் ரூ.1,200 கோடி அதிகமாக கேட்டதால் அவர்களுக்கு துறைமுக டெண்டரை கொடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது அரசின் இடம். அரசு இந்த விவகாரத்தில் எந்தவித உரிமைதாரராகவும் இல்லாமல் வெறும் பார்வையாளராக இருப்பது என்பது தவறான ஒன்று. அரசின் கட்டுப்பாட்டில்தான் அந்த துறைமுகம் இருக்க வேண்டும். அதனால் ஆளும் அரசு இது தொடர்பாக வெளிப்படையான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்.

சம்பந்தப்பட்ட முதலமைச்சர், அமைச்சர், தலைமைச் செயலாளர் அல்லது துறை செயலாளர் மார்க் தொடர்பாக போடப்பட்ட ஒப்பந்தங்கள், அதன் கால அளவு, அதில் அரசுக்கு இருக்கும் உரிமை, தற்போதைய நிலை, பெற்றிருக்கும் கடன், துறைமுகம் யாரிடம் கைமாற்றப்படவிருக்கிறது என்பது குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். புதியதாக எந்த நிறுவனம் துறைமுகத்தை குத்தகைக்கு எடுத்தாலும், தற்போதைய காலத்துக்கும் அரசுக்கு ராயல்டியாக ஆண்டுக்கு ரூ.100 கோடி வழங்க வேண்டும் என்று ஒப்பந்தம் போட வேண்டும். இந்த துறைமுகம் கடத்தலுக்கு அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. சட்டத்துக்கு விரோதமான செயல்களும் நடைபெற்றது. துறைமுகத்தின் சட்டத்துக்கு விரோதமாகவும், முறைகேடாகவும் செயல்பட்டு வந்தது. இவற்றை கண்டுபிடித்து அ.தி.மு.க பலமுறை சி.பி.ஐ விசாரணைக்கு கேட்டோம். தற்போது ஆளும் அரசை பற்றியோ அல்லது ஊழலை பற்றியோ பேச முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமிக்கு எந்த தகுதியும் இல்லை. ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகளைச் சொல்ல வேண்டும்.

இந்தியாவை அவமதிக்கும் விதத்திலும், பிரதமருக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையிலும், பல்வேறு நாடுகளில் சதி செயலில் ஈடுபடும் அமைப்புகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. புதுச்சேரியிலுள்ள குயில் தோப்பு விவகாரத்தில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி காரைக்காலிலிருந்து சப்-ரிஜிஸ்டரை வரவழைத்து பத்திரம் பதிவுசெய்தார். தாழ்த்தப்பட்ட அட்டவணை நிதியிலிருந்து பணம் எடுத்து ஒப்பந்தம் இல்லாமல் பல பகுதிகளில் 5 கோடி ரூபாய்க்கு ஹைமாஸ் விளக்குகள் போடப்பட்டன. இது ஊழல் இல்லையா… முறைகேடு இல்லையா… அரிசி வாங்கியதில், முட்டை வாங்கியதில், இலவச துணிகள் வாங்கியதில் ஊழல் நடந்திருக்கிறது. என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க கூட்டணி அரசு, கடந்தகால ஊழல் ஆட்சியினருடன் சமரசமாகச் சென்று கொண்டிருக்கிறார்கள். கடந்தகால காங்கிரஸ், தி.மு.க கூட்டணியில் நடந்த ஊழல்மீது இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது தவறான ஒன்று. ஊழல் செய்தவர்களுடன் சமரசமாக போகக் கூடாது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுவதிலேயே நாராயணசாமி காலத்தைக் கடத்துகிறார்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.