கர்நாடக மாநிலம், சிருங்கேரியில், ஸ்ரீ மலஹானி கரேஸ்வர சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா, நேற்று கோலாகலமாக நடந்தது.
வராஹமாக அவதரித்த மகாவிஷ்ணுவின் பற்களில் இருந்து தோன்றிய துங்கா நதிக்கரையில் அமைந்துள்ளது, சிருங்கேரி திவ்ய ஷேத்ரம். ஆதிசங்கரர் தோற்றுவித்த நான்கு ஆம்னாய பீடங்களில் முதன்மையானது, சிருங்கேரியில் அமைந்துள்ள ஸ்ரீ சாரதா பீடம்.
சிருங்கேரி நகரின் நடுவில், சிறிய குன்றின் மேல் புராதனமான ராமாயண காலத்தில் இருந்தே பவானி அம்பாள் சமேத மலஹானிகரேஸ்வர சுவாமி கோவில் அமைந்துள்ளது.
விபாண்டக மகரிஷி தவம் செய்த இடமானதால் மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. 35வது பீடாதிபதி ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மகாசுவாமி, ஸ்ரீ பாரதீ தீர்த்த மகா சுவாமியுடன் இணைந்து, 1985ம் ஆண்டில், கும்பாபிஷேகம் நடத்தியுள்ளார்.
இங்கு தமிழக கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில், தற்போது ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது.
ராஜகோபுரம் மற்றும் ஸ்ரீ மலஹானிகரேஸ்வரர், பவானி அம்பாள் சன்னதியின் கோபுரங்களுக்கு, நேற்று காலை 10:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. ஜகத்குரு ஸ்ரீ பாரதி தீர்த்த மகா ஸ்வாமிகளும், அவரது சீடரான ஸ்ரீ விதுசேகர பாரதியும் கும்பாபிஷேகத்தை நடத்திவைத்தனர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, காலை, 7:00 மணி முதல் 9:00 மணி வரை, 1008 சஹஸ்ர கலசாபிஷேகத்தை, ஸ்ரீ விது சேகர பாரதி சுவாமிகள் நிகழ்த்தினார்.
இதையொட்டி அவர் எழுதி உள்ள, ‘மலஹானி கரேஸ்வர அஷ்டகம்’ எனும் புதிய ஸ்தோத்திரமும் குழுவாக பாராயணம் செய்யப்பட்டது.
சுவாமிக்கு புதிய தங்கத்தில் கட்டப்பட்ட முத்துமாலையும், சிவ அஷ்டோத்தரம் பொறித்த தங்க காசு மாலையும் சமர்ப்பிக்கப்பட்டது.
மாலையில், பொது நிகழ்ச்சிகள் நடந்தன. வெளியூர் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சீடர்கள், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
கும்பாபிஷேகம் முடிந்த பின் உரையாற்றிய ஸ்ரீ ஸ்ரீ மகா சன்னிதானம் ‘இந்த புராதனமான கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்யும் இத்திருநாள் ஒரு புனிதமான நாளாகும்’ என்று கூறி, பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.
கும்பாபிஷேக விழா சிறப்பு ஏற்பாடுகளை மடத்தின் தலைமை செயல் அதிகாரி கவுரி சங்கர் செய்திருந்தார். ஸ்ரீ மலஹானி கரேஸ்வர சுவாமி கோவில் கும்பாபிஷேக நிகழ்வுகளையும், கோவில் குறித்த ஆவண படத்தை, sringeri.net என்கிற தளத்தில் காணலாம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்