"பால் தாக்கரே காப்பாற்றி இருக்காவிட்டால் பிரதமர் இந்த நிலைக்கு வந்திருக்க முடியுமா?" – உத்தவ் கேள்வி

சிவசேனாவுக்கும், பா.ஜ.க-வுக்கும் இடையே கடந்த சில மாதங்களில் மோதல் கடுமையாக அதிகரித்திருக்கிறது. மகாராஷ்டிராவில் ஆட்சியில் இருந்த சிவசேனா கூட்டணி அரசை கவிழ்த்து சிவசேனாவில் பிளவை ஏற்படுத்தி, பா.ஜ.க ஆட்சியமைத்திருக்கிறது. தற்போது சிவசேனாவுக்கு நிகராக ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவை வளர்க்கும் வேலையில் பா.ஜ.க ஈடுபட்டு வருகிறது. இதனால் பா.ஜ.க-மீது உத்தவ் தாக்கரே மிகுந்த அதிருப்தி அடைந்திருக்கிறார். இது குறித்து உத்தவ் தாக்கரே மும்பையில் வட இந்தியர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையில், “சிவசேனா கடந்த 30 ஆண்டுகளாக அரசியல் தலைமையை பாதுகாத்து வந்திருக்கிறது. ஆனால் அவர்களுக்கு(பா.ஜ.க) சிவசேனா, அகாலி தளம் தேவையில்லை. நான் பா.ஜ.க-வை விட்டுவிட்டேன். ஆனால், இந்துத்துவாவை கைவிடவில்லை.

உத்தவ் தாக்கரே

பா.ஜ.க இந்துத்துவா கிடையாது. ஒருவரை ஒருவர் வெறுப்பது இந்துத்துவா கிடையாது. பா.ஜ.க இந்துக்களிடம் பிளவை ஏற்படுத்துகிறது. கடந்த 30 ஆண்டுகளாக சிவசேனா அரசியல் நட்பை பாதுகாத்து வந்திருக்கிறது. இந்துத்துவா என்பது நம்மிடையேயான அரவணைப்பைக் குறிக்கிறது. ஆனால், பா.ஜ.க இது எதையும் விரும்பவில்லை. சிவசேனா, அகாலி தளத்தை பா.ஜ.க விரும்பவில்லை. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ராஜ்தர்மத்துக்கு மதிப்பளிக்க நினைத்தபோது, தற்போதைய பிரதமரை பால் தாக்கரேதான் காப்பாற்றினார். பால் தாக்கரே அவசரப்படவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

பால் தாக்கரே அப்போது காப்பாற்றி இருக்காவிட்டால் தற்போதைய பிரதமர் இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது. பால் தாக்கரே வெறுப்பை வளர்த்துக்கொண்டது கிடையாது. இந்துவாக இருப்பதன் அர்த்தம் மராத்தியர்கள் வட இந்தியர்களை வெறுப்பதாக அர்த்தமாகாது. எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், இந்தியாவுக்கு எதிரானவர்களையே பால் தாக்கரே வெறுத்தார். எனது கண்ணியத்தை பாதுகாத்துக்கொள்ளவே பா.ஜ.க கூட்டணியிலிருந்து விலகி தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணியுடன் சேர்ந்து ஆட்சியமைத்தேன். அப்படி செய்யாதிருந்தால் என்னுடைய மக்களில் சிலரைப் போல் (ஷிண்டே) நானும் கழுத்தில் பெல்ட் போடப்பட்ட அடிமையைப் போல் மாறியிருப்பேன்.

மோடி

நான் வட இந்தியர்கள் அல்லது முஸ்லிம்களை சந்திக்கும்போதெல்லாம் அவதூறுக்கு ஆளாகி எனது இந்துத்துவா குறித்து கேள்விகளை எதிர்கொண்டிருக்கிறேன். உங்களைச் சந்திப்பதும் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படும். நான் முஸ்லிம்களை சந்தித்தால் நான் இந்துத்துவாவை கைவிட்டுவிட்டதாகச் சொல்வார்கள். பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள்களுக்கு முன்பு மும்பைக்கு வந்தபோது யாரது சமையல் அறைக்குச் சென்றார்… அதை நான் செய்திருந்தால் நான் இந்து விரோதியாகச் சித்திரிக்கப்பட்டிருப்பேன். அதையே பிரதமர் செய்தால் பெரிய இதயத்தோடு செய்வதாகக் கூறுகிறார்கள்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.