பீஜிங்: அமெரிக்க வான்வெளியில் கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி தொடங்கி இதுவரை சீன உளவு பலூன் உள்பட 4 மர்மப் பொருட்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ள நிலையில், தங்கள் வான் எல்லையில் அமெரிக்க பலூன் 10 முறை பறந்துள்ளதாக பதிலடி கொடுத்துள்ளது சீனா.
சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் இது தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையில், “கடந்த 2022-ஆம் ஜனவரி தொடங்கி இதுவரை சீன வான் எல்லையில் அமெரிக்கா 10 பலூன்களை பறக்கவிட்டுள்ளது. அந்த பலூன்களை நாம் பொறுப்புடன், தொழில்ரீதியாக அணுகியிருக்கிறோம்” என்றார்.
கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி வடக்கு கரோலினாவில் சீன பலூன் ஒன்று பறந்தது. அந்த பலூன் 4 பேருந்துகள் அளவிற்கு பெரியதாக இருந்தது. அது சீனாவின் உளவு பலூன் என்று கூறி அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. இதனையடுத்,து சீன பயணத்தை வெளியுறவு செயலர் ஆந்தணி பிளின்கன் ரத்து செய்தார். ஆனால், அமெரிக்கா அதீதமாக எதிர்வினையாற்றுகிறது. அது வெறும் ஒரு தனியார் நிறுவனத்தின் வானிலை ஆய்வு பலூன் என்று சீனா தெரிவித்தது.
இதற்கிடையில், அமெரிக்கா 3 வெவ்வேறு மர்மப் பொருட்களை வடக்குப் பகுதியில் சுட்டு வீழ்த்தியுள்ளது. அவை சீனாவுடையதா என்பதெல்லாம் அமெரிக்கா விவரிக்கவில்லை. இருப்பினும் சந்தேகத்துக்கு இடையே பறந்தததால் சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவித்தது. இந்நிலையில்தான் பலூன் விவகாரத்தில் அமெரிக்காவைவிட தாங்கள் பொறுப்புடன் நடந்து கொண்டதாக சீன தெரிவித்திருக்கிறது.
அண்மையில், அமெரிக்கா வீழ்த்திய மர்மப் பொருட்கள் கனடா நாட்டின் எல்லைக்கு மிக மிக அருகில் விழுந்ததால், அந்தப் பகுதிக்கு நேற்று அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேரில் சென்று ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.