அங்காரா: துருக்கி – சிரிய பூகம்பத்தால் பலியானவர்கள் எண்ணிக்கை 50,000-ஐ நெருங்கலாம் என அஞ்சப்படுவதாக ஐக்கிய நாடுகளின் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
துருக்கி – சிரிய எல்லையில் கடந்த 6-ம் தேதி அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர பூகம்பம் ரிக்டர் அளவில் 7.8, 7.5 என்ற அளவில் பதிவானது. இந்த சக்திவாய்ந்த பூகம்பத்துக்கு இதுவரை 34,000-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். மீட்புப் பணிகள் ஒரு வாரமாக தொடரும் நிலையில், பூகம்பத்தின் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று ஐக்கிய நாடுகள சபை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபைத் தலைவர் மார்டின் கிரிஃபித் கூறும்போது, “இடிபாடுகளுக்கு அடியில் நாம் இன்னமும் செல்ல வேண்டும். இதனால் பலி எண்ணிக்கை 50,000 வரை நெருங்கலாம். இந்த பூகம்பத்தினால் 2.6 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணியில் 10,000-க்கு அதிகமானவர்கள் ஈடுபட்டுள்ளனர். மீட்புப் பணிகள் முடிந்த பிறகு, பூகம்பத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை பெற்று தருவது மீட்பு குழுவின் அடுத்த பணியாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
உள்நாட்டுப் போர், போதிய மருத்துவக் கட்டமைப்பு வசதியில்லாத சிரியாவின் நிலை பூகம்பத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சிரியாவுக்கு உதவி வேண்டி சர்வதேச தன்னார்வ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையில், பூகம்பத்தினால் பாதிப்படைந்த சிரியாவிற்கு நிவாரணப் பொருட்களை கொண்டு சேர்ப்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையும் ஒப்புக் கொண்டுள்ளது.