சென்னை: ஆர்எஸ்எஸ் சொல்வதை ஆளுநர் ஆர்.என்.ரவி அப்படியே பேசுவதாக திமுக அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.எஸ்.இளங்கோவன் விமர்சித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி குறித்து ‘மோடி 20 – நனவாகும் கனவுகள்’, ‘அம்பேத்கர் மற்றும் மோடி – சீர்திருத்த சிந்தனைகள், செம்மையான செயல்பாடுகள்’ ஆகிய 2 நூல்களின் தமிழ் பதிப்பு வெளியீட்டு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு தலைமை வகித்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ”தமிழகத்தில் சமூகநீதி பற்றி பரவலாக பேசுகிறோம். ஆனால், குடிநீர் தொட்டியில் மலம் கலப்பது, கோயிலுக்குள் பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுப்பது, அங்கன்வாடியில் தரையில் அமர வைப்பது போன்ற நிகழ்வுகள் இங்கு தொடர்ந்து நடக்கின்றன. அமைதி நிலவும் சமுதாயத்தை பிளவுபடுத்த சிலர் முயற்சிக்கின்றனர். அதை சரிசெய்ய வேண்டும்.
முத்தலாக் தடை சட்டம் மூலம் முஸ்லிம் சகோதரிகளின் உரிமையை மீட்டு சமூக நீதியை காத்தவர் பிரதமர் மோடி. இந்தியா ஒரே குடும்பம். அனைவருக்குமான வளர்ச்சியை பிரதமர் மோடி வழங்கி வருகிறார். சிலர் என்ன மாடல் என்றே தெரியாமல், பல மாடல்களை சொல்கின்றனர். ஆனால், நாட்டின் அடிப்படை கட்டமைப்பை மாற்றி முழுவதும் வளர்ச்சியடைந்த இந்தியாவை பிரதமர் மோடி தற்போது உருவாக்கியுள்ளார்.
உலக நாடுகள் மத்தியிலும் இந்த மாற்றம், எழுச்சி முக்கிய தாக்கத்தை உருவாக்கப் போகிறது. அடுத்த 25 ஆண்டுகளில் உலகின் தலைமையகமாக இந்தியா உருவெடுக்கும். அதற்கு ஒவ்வொரு இந்தியரும் பங்களிக்க வேண்டும்” என தெரிவித்தார்.
அவரது இந்த பேச்சு திமுகவையும், தமிழக அரசையும் மறைமுகமாக விமர்சிப்பதாக இருந்ததை அடுத்து, திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் அதற்கு பதில் அளித்துள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ”தலித்துகளுக்கும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கும் கல்வியும் வேலைவாய்ப்பும் மறுக்கப்பட்டது. திராவிட ஆட்சி காரணமாகத்தான் அவர்களுக்கு கல்வியும் வேலைவாய்ப்பும் கிடைத்தது.
இந்துத்துவ கொள்கை என்பது மனுதர்மத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒருவர் பிறக்கும்போதே உயர் சாதியிலும், தாழ்த்தப்பட்ட சாதியிலும் பிறப்பதாக மனு தர்மம் கூறுகிறது. இது நமது கலாச்சாரம் அல்ல. வடக்கே இருந்து தமிழகத்திற்கு வந்தது இது.
ஆளுநர்கள் மட்டுமின்றி, பாஜக தலைவர்கள் யாரும் பிரதமர் முதல் கீழ்மட்ட உறுப்பினர்கள் வரை சுயமாக பேச முடியாது. பேசச் சொன்னதைத்தான் பேச வேண்டும். சுயசிந்தனை உள்ளவர்களுக்கு பாஜகவிலோ ஆர்எஸ்எஸ்ஸிலோ இடமில்லை. உயரதிகாரிகளின் உத்தரவுக்கு அவர்கள் கீழ்படிய வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
இதனிடையே, ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சை விமர்சித்துள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, “எந்தக் காலத்தில் தமிழகத்தில் முற்போக்கு கட்சிகள் தீண்டமையை ஆதரித்திருக்கிறார்கள்? தீண்டாமையை என்றைக்கு நியாயப்படுத்தி இருக்கிறார்கள்? தீண்டாமைக்கு எதிராக இந்த அரசும், எங்களுடைய கூட்டணியும், காவல் துறையும் இருக்கிறது” என்று கூறியுள்ளார். அதன் முழு விவரம்: “தீண்டாமைக்கு அடிப்படையே ஆர்எஸ்எஸ், பாஜகதான்” – ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கே.எஸ்.அழகிரி பதில்