திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைரோடு அருகே உள்ள கன்னிமார் நகரைச் சேர்ந்தவர் பாண்டி. இவர் மகன் சதீஸ் கண்ணன். இவர்களிடம் அதே பகுதியைச் சேர்ந்த சங்கர், நாச்சியப்பன், சின்னக்கருப்பு உள்ளிட்ட சிலர் நிலப்பிரச்சினை தொடர்பாக தகராறு செய்து, கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, பாண்டி மற்றும் சதீஸ் கண்ணன் இருவரும் போலீசில் புகார் அளித்துள்ளனர். ஆனால், போலீசார் புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையறிந்த பாண்டி, நிலக்கோட்டை நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரை விசாரணை செய்த நீதிமன்றம் சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. அதன் பிறகும் போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பாண்டி காவல் நிலையம் முன்பு விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த போலீசார் பாண்டியை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், அங்கு வர சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பிறகு போலீசார் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே பாண்டி காவல் நிலையம் முன்பு விஷம் குடித்து நியாயம் கேட்ட போது அங்கு பணியில் இருந்த தலைமை காவலர் சண்முகலெட்சுமி அதை கண்டு கொள்ளாமல் செல்போனில் பேசியபடி இருந்தார். மேலும், பாண்டி மயங்கி விழுந்தபோதும் அவர் கண்டுகொள்ளவில்லை.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தலைமை காவலர் சண்முகலெட்சுமி மீது விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் உத்தரவிட்டார்.
அந்த அறிக்கை அடிப்படையில் போலீஸ் தலைமை காவலர் சண்முக லட்சுமியை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து எஸ்.பி. பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.