புதுடெல்லி: வரலாற்றில் யாருடைய பங்களிப்பும் நீக்கப்படக் கூடாது என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. சில நகரங்களில் பெயர்கள் மாற்றப்பட்ட முடிவு என்பது நீண்ட ஆலோசனைக்குப் பின்னர் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டது. அவை அரசாங்கத்தின் உரிமைக்கு உட்பட்டது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இஸ்லாமியப் பெயர்கள் கொண்ட நகரங்கள், தெருக்கள், சில அரசு கட்டிடங்களின் பெயர் தொடர்ந்து பாஜக ஆளும் மாநில அரசுகளால் மாற்றப்பட்டு வருவதாக கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் இது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அமித் ஷா, “வரலாற்றில் யாருடைய பங்களிப்பும் நீக்கப்படக் கூடாது. ஆனால் நாட்டின் பாரம்பரியத்தை நிலைநிறுத்தும் முயற்சியில் சில நடவடிக்கைகள் எடுக்கும்போது அதை யாரும் எதிர்க்கக் கூடாது. ஏற்கெனவே காலங்காலமாக நிலைத்திருந்த எந்தப் பெயரையும் நாங்கள் மாற்றவில்லை. இருந்த பெயரை மாற்றி புதுப் பெயர் வழங்கப்பட்ட இடங்களிலேயே பழைய பெயரை மீட்டெடுக்கிறோம் என்றார்.
ஜம்மு காஷ்மீர் வரலாற்றில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பங்களிப்பு இருட்டடிப்பு செய்யப்படுவதாக புகார்கள் வருகின்றனவே எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அமித் ஷா, நேரு ஆட்சியில் தான் காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 அமல்படுத்தப்பட்டது. அந்தச் சட்டத்தால் நாட்டுக்கு பெரிய இழப்புகள் ஏற்பட்டன. ஆனால் இப்போது அது நீக்கப்பட்ட பின்னர் அங்கே நடைபெறும் வளர்ச்சித் திட்டங்களால் தீவிரவாத தாக்குதல்கள் குறைந்துள்ளன. இது புள்ளிவிவரங்கள் மூலம் நிரூபணமாகியுள்ளது” என்றார்.