இந்தியக் குடும்பங்களின் நிதி சார்ந்த முதலீடு (Financial Investments) எப்படி இருக்கிறது என்கிற புள்ளி விவரத்தை இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ) வெளியிட்டுள்ளது.
அதில், முடிந்த 2021-22-ம் நிதி ஆண்டில் அதாவது 2021 ஏப்ரல் 1-ம் தேதி முதல் 2022-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரையிலான 12 மாதத்தில் இந்தியக் குடும்பங்களின் முதலீடு எதில் அதிகமாக செய்யப்பட்டுள்ளது என்கிற விவரம் தெரிய வந்துள்ளது.
வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்..!
இந்தியக் குடும்பங்களின் மிகப் பெரிய சேமிப்பாக வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் இருக்கிறது. 2021-22-ம் ஆண்டில் இந்தியக் குடும்பங்களின் மொத்த நிதி சார்ந்த சேமிப்பில் வங்கிகளில் செய்யப்பட்டிருக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் 25.68 சதவிகிதமாக உள்ளது. ரூபாய் மதிப்பில் ரூ.6,51,700 கோடியாக உள்ளது.
இது தவிர வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மற்றும் பெரிய நிறுவனங்களின் ஃபிக்ஸட் டெபாசிட்டில் 1.64% தொகை அதாவது ரூ. 41,600 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் 0.09% அதாவது ரூ.2.200 கோடிக்கு டெபாசிட் போடப்பட்டுள்ளது.
பிராவிடெண்ட் ஃபண்ட்..!
வங்கி எஃப்டிக்கு பிறகு பணியாளர் பிராவிடெண்ட் ஃபண்ட் (இ.பி.எஃப்), பப்ளிக் பிராவிடெண்ட் ஃபண்ட் (பி.பி.எஃப்) ஆகியவை இந்தியர்களின் மிகப் பெரிய சேமிப்பாக இருக்கிறது.
இந்தியக் குடும்பங்களின் மொத்த சேமிப்பில் 2021-22-ம் ஆண்டில் இ.பி.எஃப் மற்றும் பி.பி.எஃப் இவற்றின் பங்களிப்பு 22.92 சதவிகிதமாக உள்ளது. அதாவது நிதி ஆண்டில் மட்டும் ரூ.5,81,700 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு அதிக தொகை முதலீடு செய்ய முக்கிய காரணம், இ.பி.எஃப் கட்டாய சேமிப்பாக இருப்பதாகும்.
ஆயுள் காப்பீடு பாலிசிகள்..!
நம்மவர்கள் எண்டோமென்ட் ஆயுள் காப்பீடு பாலிசிகளை முதலீடாக கருதுவதால் அதில் 17.37 சதவிகிதம் அதாவது ரூ.4,40,800 கோடி போடப்பட்டுள்ளது.
சிறு சேமிப்பு திட்டங்கள்..!
தொடர் வைப்பு (ஆர்.டி) திட்டம், மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டம், தேசிய சேமிப்பு சான்றிதழ் உள்ளிட்ட சிறு சேமிப்பு திட்டங்களில் 13.43% அதாவது ரூ.3,40,700 கோடி போடப்பட்டுள்ளது.
மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை..!
அண்மை ஆண்டுகளில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இதனால், இதில் இந்தியர்கள் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. கடந்த 2021-22-ம் ஆண்டில் இந்தியக் குடும்பங்களின் மொத்த முதலீட்டில் 6.33% அதாவது ரூ.1,60,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. பங்குச் சந்தையில் 1.92 சதவிகிதம் அதாவது ரூ.48,600 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இவை தவிர இந்தியர்கள் கையில் ரொக்கப்பணமாக 10.63% அதாவது ரூ.2,69,700 கோடியாக வைத்திருக்கிறார்கள் என்கிறது ஆர்.பி.ஐ புள்ளி விவரம்.