*கிராமப் புறங்களில் அதிக அளவில் வருகை
*பொதுமக்கள், கர்ப்பிணிகள் கடும் தவிப்பு
அணைக்கட்டு : வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவில் ஊசூர், பள்ளிகொண்டா, பொய்கை, ஒடுகத்தூர், மராட்டிபாளையம், பீஞ்சமந்தை உள்ளிட்ட கிராமங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் இயங்கி வருகிறது. இதன்கீழ் துணை சுகாதார நிலையங்களும் இயங்கி வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் வட்டார மருத்துவ அலுவலர்கள், மருத்துவ அலுவலர்கள், பயிற்சி டாக்டர்கள், மருந்தாளுநர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
கிராமப்புற பகுதியில் இயங்கும் இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒரு நாளைக்கு 100 முதல் 400 வரை புறநோயாளிகளுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சை பெறும் உள்நோயாளிகளும் உள்ளனர். வாரத்தில் ஒரு நாள் கர்ப்பிணிகளுக்கு பரிசோதனைகளும், சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரத்த அழுத்தம், சக்கரை நோய் பாதிப்புகள், காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு மாத்திரைகள் வாங்குபவர்கள், சிகிச்சை எடுப்பவர்கள் காலையில் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.
அந்தநேரத்தில் போதுமான டாக்டர்கள் இல்லாததால் அவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதில் பொய்கை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குபட்டு 52 கிராமங்கள் உள்ளன. அதில் ஒரு நாளைக்கு 400க்கும் மேற்பட்டோர் சிகிச்சைகள் எடுத்து வருகின்றனர். அந்த மருத்துவமனையில் பணியாற்றி ஒரிரு டாக்டர்கள் மட்டுமே பணியில் உள்ளார். பல்வேறு நோயாளிளுக்கு உரிய நேரத்திற்கு சிகிச்சை அளிக்க முடியாமல் சிரமபட்டு வருகின்றனர்.
இதுமட்டுமின்றி மருந்து வழங்கும் இடம், குளுக்கோஸ் ஏற்றும் இடங்களிலும் போதிய ஆட்கள் இல்லாததால் சிகிச்சை பெற வரும் கிராமபுறங்களை சேர்ந்தவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, முதியவர்கள், கர்ப்பிணிகள் கடும் அவதிப்படுகின்றனர். இரவு நேரத்தில் ஒரு டாக்டர் கூட இல்லாமல் செவிலியர்களே முதலுதவி சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதன் பக்கத்தில் சமத்துவபுரம் இருப்பதால் அங்கு இருக்கும் மக்கள் இந்த சுகாதார நிலையத்தில்தான் சிகிச்சை எடுத்து வருகின்றனர். அவர்களே டாக்டரை சந்திக்க நீண்ட நேரம் காத்திருப்பதாக புகார் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் தாலுகாவில் உள்ள மற்ற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 2 டாக்டர்களே இருப்பதால் சிகிச்சை எடுக்க வருபவர்கள் உரிய நேரத்தில் சிகிச்சை பெற வழியின்றி தவிக்கின்றனர். எனவே தாலுகாவில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதலாக டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் நியமிக்க வேண்டும் என தாலுகாவில் உள்ள கிராம மக்கள், முதியவர்கள், கர்ப்பிணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.