அகர்தலா: திரிபுராவில் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, இதுவரை ரூ.44 கோடி மதிப்புள்ள ரொக்கம் மற்றும் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி கிரண்குமார் தினராவ் தகவல் தெரிவித்துள்ளார்.
வட கிழக்கு மாநிலமான திரிபுராவுக்கு பிப்., 16ம் தேதியும், நாகாலாந்து மற்றும் மேகாலயா சட்டசபை தொகுதிகளுக்கு பிப்., 27ம் தேதியும் சட்டசபை தேர்தல் நடத்தப்படும். இந்த தேர்தல்களில் பதிவாகும் ஓட்டுகள், மார்ச் 2ல் எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும். திரிபுராவில், முதல்வர் மாணிக் சாஹா தலைமையிலான பா.ஜ., அரசின் பதவிக்காலம் மார்ச் 22ல் முடிவுக்கு வருகிறது. தற்போது நடக்கவுள்ள தேர்தலில், ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியில் பா.ஜ., ஈடுபட்டுள்ளது. மேலும் எதிர்கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக, திரிபுரா தலைமைத் தேர்தல் அதிகாரி கிரண்குமார் தினராவ் அளித்த பேட்டி: வரும் பிப்-16 ம் தேதி திரிபுராவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இதுவரை நடைபெற்ற சோதனையில் 44 கோடி ரூபாய்க்கு மேல் பறிமுதல் செய்துள்ளோம். இதில் ரொக்கம், போதைப்பொருள், தங்கம் உள்ளிட்ட பொருட்கள் அடங்கும்.
ஓட்டுப்பதிவின் போது ஏதேனும் அசம்பாவித சம்பவங்களைத் தவிர்க்க நடவடிக்க எடுக்கப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 250க்கும் மேற்பட்ட சிறப்பு காவல் படையினர் அமைக்கப்பட்டுள்ளன. இன்று முதல் அசாம் மற்றும் மிசோரம் எல்லைகளை சீல் வைத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement