“அதானி விவகாரத்தில் பாஜக பயப்படவும், மறைக்கவும் ஒன்றுமில்லை,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து உள்ளார்.
அதானி குழுமம் மீதான பங்குச்சந்தை மோசடி தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இது அதானி குழுமத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் எழுப்பி பெரும் அமளியில் ஈடுபட்டன. மேலும், அதானிக்கு சாதகமாக மத்திய அரசு செயல்படுவதாகவும் காங்கிரஸ் குற்றஞ்சாட்டி வருகிறது.
இதனிடையே, அதானி குழுமம் மீதான ஹிண்டர்ன்பர்க் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. அதில், அதானி நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதா? என்பது குறித்து நிபுணர் குழு அமைத்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு சம்மதம் தெரிவித்து உள்ளது.
இந்நிலையில் இன்று, மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா, ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
அதானி குழும விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட் விசாரித்து வருகிறது. சுப்ரீம் கோர்ட் வசம் வழக்கு விசாரணை இருப்பதால் அமைச்சராக இந்த விவகாரத்தில் நான் கருத்து சொல்வது சரியல்ல. ஆனால், இதில் பாஜக பயப்படவோ, மறைக்கவோ எதுவும் இல்லை.
பிரதமரை ஒட்டுமொத்த நாடும் கவனித்து கொண்டிருக்கிறது. சமூக ஊடக தளங்களை சென்று பாருங்கள். பிரதமர் மோடி உரைக்கு வரும் விமர்சனங்களை படித்து பாருங்கள். சில கட்சிகள் பிரதமர் உரையை கவனிக்க விரும்பாமல், அரசியல் நிலைப்பாட்டை எடுத்து உள்ளனர். பொதுமக்கள் இதனை பார்த்து கொண்டிருக்கின்றனர்.
நான் பிஎப்ஐ.யும் காங்கிரசும் ஒன்று தான் என்று கூறவில்லை. பிஎப்ஐ மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. பிஎப்ஐ உறுப்பினர்கள் மீதான வழக்குகளை காங்கிரஸ் திரும்பப் பெற்றது. நாங்கள் அதை தடுக்க முயற்சித்தோம். இதில் கவலைப்பட என்ன உள்ளது? நாங்கள் வெற்றிகரமாக பிஎப்ஐ அமைப்பை தடை செய்து விட்டோம்.
பிஎப்ஐ மதமாற்றம், பயங்கரவாதத்தை பரப்புகிறது என நான் நம்புகிறேன். பயங்கரவாத செயலுக்கான மூலப்பொருட்களை தயாரிக்க பிஎப்ஐ முயற்சிக்கிறது. நாட்டின் ஒற்றுமைக்கு எதிரான பல்வேறு செயல்களில் பிஎப்ஐ மேற்கொண்டு வருவதற்கான பல்வேறு ஆவணங்கள் எங்களிடம் உள்ளது. பிஎப்ஐ தடை அரசியலுக்கு அப்பாற்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.