கோபி: உணவில்லாமல் பலியான தாய், கணவர் சடலத்துடன் ஒரு வாரமாக வீட்டில் முடங்கிய பெண்ணையும், அவரது மகனையும் காப்பகத்தில் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் கோபி வண்டிப்பேட்டையை சேர்ந்தவர் மோகனசுந்தரம். இவரது மனைவி சாந்தி (60). தம்பதிக்கு சரவணக்குமார் என்ற மகனும், சசிரேகா என்ற மகளும் இருந்தனர். இவர்கள் 4 பேரும் சாந்தியின் தாய் கனகாம்பாள் வீட்டில் வசித்து வந்த நிலையில், சசிரேகாவிற்கு திருமணமாகி தனது கணவருடன் காங்கயம் சென்றார். வயது முதிர்வு, வறுமை காரணமாக மோகனசுந்தரம் வேலைக்கு செல்ல முடியவில்லை. இந்நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டு மோகனசுந்தரம், கனகாம்பாள் ஆகியோர் கடந்த வாரம் உயிரிழந்தனர்.
இருவரது சடலத்தையும் அடக்கம் செய்ய வழியின்றி தவித்த சாந்தி, மனவளர்ச்சி குன்றிய சரவணக்குமாருடன் வீட்டிற்குள் முடங்கினார். துர்நாற்றம் வீசவே அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து கோபி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடம் விரைந்த போலீசார், சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்களின் இறுதி சடங்கிற்கான செலவுகளை கோபி காவல்துறையினர் ஏற்று அடக்கம் செய்ய ஏற்பாடுகளை செய்தனர். வாழ்வாதாரம் இன்றி தவித்த தாய், மகனை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைப்பதற்காக விசாரித்தனர்.
அப்போது, சாந்தியின் உறவினர் ரமேஷ் கோபியில் இருப்பது தெரிய வந்தது. அவரிடம் கேட்டபோது, இருவரையும் பராமரிக்க தன்னிடம் போதிய வசதி இல்லை என்பதால், இருவரையும் ஈரோட்டில் உள்ள தனியார் அறக்கட்டளை மூலமாக பராமரிக்க வேண்டும் என ரமேஷ் கடிதம் மூலம் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து ஈரோட்டில் உள்ள தனியார் அறக்கட்டளை நிர்வாகிகள் இன்று சாந்தி மற்றும் சரவணக்குமாரை அழைத்து சென்று காப்பகத்தில் பராமரிக்க உள்ளனர். கோபி போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.