பாதுகாப்பு சிக்கல்களுக்கு தீர்வு: ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்!

பெங்களூருவில் ஏரோ இந்தியா 2023 கண்காட்சிக்கு இடையே பாதுகாப்பு அமைச்சர்களின் மாநாட்டுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஏற்பாடு செய்திருந்தார். பாதுகாப்புத்துறையில் நடவடிக்கைகளை மேம்படுத்துவதன் மூலம் பகிரப்பட்ட முன்னேற்றம் என்ற விரிவான கருப்பொருளுடன் இந்த மாநாடு நடைபெற்றது.

முதலீடுகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, கூட்டு முயற்சிகள், இணை மேம்பாடு, இணை உற்பத்தி ஆகியவற்றின் மூலம் திறன் கட்டமைப்புக்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பான அம்சங்கள் குறித்து இந்த மாநாட்டில் ஆலோசனை நடத்தப்படும். விண்வெளி, செயற்கை நுண்ணறிவு, கடல்சார் பாதுகாப்பு ஆகிய விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்படும்.

இந்த மாநாட்டில் தொடக்கவுரை ஆற்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அதிகரித்து வரும் சிக்கல் மிகுந்த உலகப் பாதுகாப்பு சூழலில் நாடுகளின் பெரும் ஒத்துழைப்பு அவசியம் என்று வலியுறுத்தினார். விரைவான நடவடிக்கைகள் மூலம் பாதுகாப்பு குறித்த சிக்கல்களுக்குத் தீர்வு காண முயல வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அதிவிரைவான மாற்றங்களை சமாளிக்க நிகழ்நேர ஒத்துழைப்பு அவசியம் என்று ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.

பொருளாதாரம், பாதுகாப்பு, சுகாதாரம் அல்லது பருவநிலை போன்ற விஷயங்களில் ஏதேனும் பெரும் மாற்றம் ஏற்படுமானால் அது உலகளவில் பிராந்தியங்களுக்கு அமைதி, பாதுகாப்பு விஷயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என ராஜ்நாத் சிங் கருத்து தெரிவித்தார். ஒரு பிராந்தியத்தில் ஏற்படும் தாக்கம் பல வழிகளில் உலகம் முழுவதையும் பாதிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். உச்சிமாநாடுகள், மாநாடுகள், கூட்டங்கள் ஆகியவற்றின் போது கலந்துரையாடல்களை மேற்கொள்வதன் மூலம், பாதுகாப்பான முன்னேற்றமான எதிர்காலத்திற்கு ஏற்றவகையிலான தீர்வுகளை உரியமுறையில் மேற்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

பயங்கரவாதம் போன்ற அச்சுறுத்தல்களை சமாளிக்க புதிய உத்திகளை வகுப்பது அவசியம் என்றும், கூட்டுப்பாதுகாப்பு முயற்சிகள் இதற்கு தேவை என்றும் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார். நட்பு நாடுகளுக்கு பாதுகாப்பு கூட்டாண்மையை இந்தியா அதிகரித்து வருவதுடன், தேசிய முன்னுரிமைகளின் அடிப்படையில் பல்வேறு நாடுகளுக்கு ஒத்துழைப்பை இந்தியா அளித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் பாதுகாப்புத்துறையில் மேற்கொள்ளப்படும் தொடர் நடவடிக்கைகள் மற்றும் மகத்தான வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் இந்த மாநாட்டில், 27 நாடுகளின் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் உள்பட 80 நாடுகளைச் சேர்ந்த 160-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.