சேலம் : சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ‘‘கள ஆய்வில் முதல்வர்’’ திட்டம் கடந்த 1ம் தேதி தொடங்கப்பட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் முதற்கட்டமாக வேலூர் மண்டலத்திற்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்தநிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டாம் கட்டமாக சேலம் மண்டலத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அதன்படி, பிப்.15 மற்றும் 16ம் தேதிகளில் சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் முதல்வர் கள ஆய்வு செய்ய உள்ளார்.
எவ்வித முன்னறிவிப்புமின்றி நேரடியாக அரசு துறை அலுவலகங்களுக்கு சென்று கள ஆய்வு பணியில் ஈடுபட திட்டமிட்டுள்ளார். ஆய்வுப் பணியின் முதற்கட்டமாக சேலம் சென்ற முதல்வர் ஸ்டாலின், ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். வட்டாட்சியர், தனி வட்டாட்சியர் உள்ளிட்ட அலுவலர்களிடம் அலுவல் செயல்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறினார். அரசின் சமூக நலத்திட்டங்கள் ஓமலூர் வட்டத்தில் எத்தனை மக்களுக்கு சென்று சேர்ந்துள்ளது என்பது குறித்தும் முதல்வர் கேட்டறிந்தார்.