சென்னை: கோவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கார் ஒன்று வெடி விபத்துக்குள்ளானது. இது வெறும் விபத்தல்ல இது சதித்திட்டத்தின் பின்னணி என்று போலீசார் விசாரணையில் தெரிய வந்தன. கார் வெடிப்புக்கு உள்ளானதில் ஜமீசா முபின் என்ற வாலிபர் பலியானார். ஜமேசா முபீனின் பின்னணி மற்றும் அவர்களின் சகாக்கள் உள்ளிட்டவர்கள் பற்றி போலீசார் விசாரணை நடத்திய பொழுது முகமது தல்கா , முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் நடந்த நான்கு நாட்களில் இந்த வழக்கு சென்னை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டன. வழக்கை கையில் எடுத்த என் ஐ ஏ அதிகாரிகள் தமிழ்நாடு போலீசார்களிடமிருந்து பெறப்பட்ட கோப்புகளின் அடிப்படையில் விசாரணையை துரிதப்படுத்தினர்.
விசாரணையின் அடிப்படையில் சிலர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் கோவை வந்த என் ஐ ஏ அதிகாரிகள் ஜமீஷா முபீனின் மனைவி மற்றும் முன்னாள் கைதான நபர்களிடம் வாக்குமூலம் பெற்று ஆவணப்படுத்தி இருக்கின்றனர்.
அதன் அடிப்படையில் இன்று காலை சென்னை நெல்லை கோவை உள்ளிட்ட 60 இடங்களில் தேசிய முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட ஆரம்பித்திருக்கின்றனர்.
கோயம்புத்தூரை பொறுத்தவரையில் உக்கடம்,குனியமுத்தூர் ஆத்துப்பாலம், கரும்புக்கடை ஜி, எம் நகர், வசந்தம் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 15க்கும் மேற்பட்ட வீடுகளில் என் ஐ ஏ அதிகாரிகள் காலை 6 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக கிடைக்கப் பெற்ற தடயங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் நடந்து வரும் இந்த சோதனையில் அடுத்த கட்டமாக யார் கைதாக போகின்றனர் ? என்ன கைப்பற்ற போகின்றது என்பது பின்னர் தெரியவரும்.
சிறிய கால இடைவெளியில் மீண்டும் தேசிய முகமை அதிகாரிகளின் இந்த சோதனை, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் இரண்டு இடங்களிலும், தென்காசி மாவட்டத்தில் ஒரு இடத்திலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் சட்டவிரோத பணப் பரிமாற்றம் குறித்த தகவலின் அடிப்படையில் வங்கி அதிகாரிகள் துணையோடு சோதனை நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகம் முழுவதும் NIA அதிகாரிகள் 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர் தென் மாவட்டங்களான நெல்லை மாவட்டத்தில் டவுன் அருகே உள்ள கரிக்கா தோப்பு பகுதியில் வசிக்கும் அன்வர்தீன் என்பவரது வீட்டில் அதிகாலை 5 மணி முதல் சோதனை நடத்தப்படுகிறது. நான்கு அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
அன்வர்தீன் கட்டுமானத்திற்கு தேவையான ஜல்லி மணல் ஏஜென்ட் முறையில் நடத்தி வரும் நிலையில், சட்டவிரோத பண பரிமாற்றம் கண்டறியப்பட்டதால் அவரது வீட்டில் சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் மாவட்டத்தில் ஏர்வாடி பகுதியில் கட்டளை தெருவில் உள்ள கமாலுதீன் என்பவரது வீட்டில் சோதனை நடந்து வருகிறது
இதனிடையே தென்காசி மாவட்டம் அச்சன் புதூர் பகுதியில் ஹரினி ஆயிஷா என்ற பெண்மணி வீட்டிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆயுதம் ஏந்திய உள்ளூர் போலீசாரின் பாதுகாப்புடன் இந்த சோதனை நடத்தப்படுகிறது அதிகாலை 5 மணிக்கு தொடங்கிய சோதனை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது .