தேர்தலுக்கு பின் எதிர்கட்சிகள் முகத்தை காட்டமுடியாது; திரிபுரா முதல்வர் உறுதி.!

கம்யூனிஸ்ட்களின் கோட்டை என கருதப்பட்ட திரிபுராவில், கடந்த சட்டப்பேரவை தேர்தலில் வென்று பாஜக வெற்றிக் கொடி ஏற்றியது. சுமார் 25 ஆண்டுகால கம்யூனிஸ்ட் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்த பாஜக, வடகிழக்கில் பாஜகவிற்கு செல்வாக்கு கிடையாது என்ற பிம்பத்தை உடைத்து, நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பரந்து விரிந்த கட்சி என்ற அடையாளத்தை பெற்றது.

தற்போது பாஜக வெற்றிகரமாக 5 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்யப் போகிறது. இந்தநிலையில் மொத்தம் 60 சட்டமன்ற தொகுதிகல் இருக்கின்றன. இதற்கான தேர்தல் பிப்ரவரி 16ஆம் தேதி (நாளை) நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ஆம் தேதி நடக்கிறது. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 31 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சியே பெரும்பான்மை பெற்று ஆட்சிக் கட்டிலில் அமரும்.

சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஏற்கனவே இருமுனை போட்டியாக பாஜக, காங்கிரஸ் – இடதுசாரிகள் ஆகியோர் தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் மூன்றாவது கட்சியாக திப்ரா மோதா (TIPRA Motha) உத்வேகம் காட்டி கொண்டிருக்கிறது. இது திரிபுரா காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் பிரத்யோத் பிக்ராம் மாணிக்யா தெப்பர்மா தொடங்கிய அரசியல் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனியாக போட்டியிடுகிறது.

திரிபுராவில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 55 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக பாஜக அறிவித்துள்ளது.திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணி (IPFT) உடன் கூட்டணி குறித்த ஆலோசனையில் ஈடுபட்ட பாஜக அந்த கட்சிக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங் , மம்தா பானர்ஜி ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

பிரதமர் மோடி ஒரே வாரத்தில் இரண்டு முறை திரிபுராவில் பிரச்சாரம் மேற்கொண்டார். எதிர்கட்சிகளை கடுமையாக சாடிய பிரதமர் மோடி, பாஜகவின் செயல்பாடுகளை பட்டியலிட்டார். இந்தநிலையில் எதிர்கட்சிகள் இல்லாத திரிபுராவிற்காக காத்துக் கொண்டு இருப்பதாக முதல்வர் மாணிக் சாஹா தெரிவித்துள்ளார்.

புல்வாமா தாக்குதல்: உளவுத்துறை எப்படி கோட்டை விட்டது? 4வது ஆண்டில் சீறிய காங்கிரஸ்!

இது குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர் கூறும்போது, ‘‘திரிபுராவில் கடந்த 2018ம் ஆண்டு பாஜக பெற்ற வெற்றி என்பது வரலாற்று நிகழ்வாகும். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் கிடைத்த இடங்களை விட தற்போது அதிக இடங்களைப் பெறுவோம். திரிபுரா தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் பொதுவெளியில் முகத்தைக் காட்ட முடியாது. பொய்யையும் அவதூறுகளையும் மட்டுமே எதிர்கட்சிகள் பரப்பி வருகின்றனர். எதிர்கட்சிகள் இல்லாத திரிபுராவிற்காக காத்துக் கொண்டிருக்கிறேன். மக்களும் அதைத் தான் விரும்புகிறார்கள்’’ என மாநில முதல்வர் மாணிக் சாஹா தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.