சுவா: ஹிந்தி மொழிக்கு முக்கியத்துவம் தேவைப்படுகிறது. காலனித்துவ காலத்தில் ஒடுக்கப்பட்ட பல மொழிகள் மற்றும் மரபுகள் மீண்டும் உலக அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது என 12 வது உலக ஹிந்தி மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார்.
பசிபிக் கடல் தீவு நாடான பிஜியில், 15 முதல் 17ம் தேதி வரை, 12வது உலக ஹிந்தி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை, அந்நாட்டு பிரதமர் சித்திவேணி ரபுகாவுடன் இணைந்து, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று(பிப்., 15) துவக்கி வைத்தார்.
பின்னர் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:
12 வது ஹிந்தி மாநாட்டின் துவக்க விழாவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. எங்களுடன் கூட்டு பங்குதாரராக இருக்கும் பிஜி அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட காலம் உறவை வலுப்படுத்த இது ஒரு வாய்ப்பாகும்.
உலக இந்தி மாநாடு போன்ற நிகழ்வுகளில், இந்தி மொழியின் சிறப்பம்சங்கள் உலக அளவில் தெரிய உதவும். பிஜி, பசிபிக் பிராந்தியம் மற்றும் ஒப்பந்த நாடுகளில் ஹிந்தியின் சிறப்பம்சங்கள் குறித்து நாங்கள் விவாதிப்போம். இது நவீனத்துவத்தை மேம்படுத்த உதவும்.
இந்தி மொழி, அதன் உலகளாவிய பயன்பாடு பரவ கவனம் செலுத்த வேண்டும். ஹிந்தி மொழிக்கு முக்கியத்துவம் தேவைப்படுகிறது. காலனித்துவ காலத்தில் ஒடுக்கப்பட்ட பல மொழிகள் மற்றும் மரபுகள் மீண்டும் உலக அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியின் போது பிஜியின் நாடியில் நடைபெற்ற 12வது உலக ஹிந்தி மாநாட்டில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பிஜியின் அதிபர் ரது வில்லியம்வுடன் இணைந்து புத்தகங்களை வெளியிட்டனர்.
பிஜியின் தலைவர் பேசுகையில், இந்நிகழ்ச்சி இந்தியாவுடன் பிஜியின் உறவு முறையை மேலும் வலுப்படுத்த, இந்நிகழ்ச்சி ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. பிஜியர்கள் பாலிவுட் திரைப்படங்களைப் பார்க்க விரும்புகிறார்கள் எனக் கூறினார்.
‘ஹிந்தி பாரம்பரிய அறிவு முதல் செயற்கை நுண்ணறிவு வரை’ என்ற கருப்பொருளை மையமாக வைத்து நடைபெறும் இம்மாநாட்டில், 10க்கும் மேற்பட்ட அமர்வுகள் இடம் பெறுகின்றன.
இதற்காக ஹிந்தி அறிஞர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய 270 பேர் உள்ள குழு பங்கேற்கின்றனர். மூன்று நாள் நடக்கும் இந்த மாநாட்டில், 50 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
சந்திப்பு:
12வது ஹிந்தி மாநாட்டை துவக்கி வைக்க, பசிபிக் கடல் தீவு நாடான பிஜி சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அந்நாட்டு பிரதமர் சித்திவேணி ரபுகாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது இரு தரப்பு உறவுமுறை குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்