புதுடெல்லி: இந்தியாவிடம் இருந்து தேஜாஸ் போர் விமானங்களை வாங்க அர்ஜென்டினாவும், எகிப்தும் ஆர்வம் காட்டி இருப்பதாக இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் அனந்தகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஒற்றை இன்ஜின் கொண்டதாகவும், பல்வேறு பயன்பாடுகளுக்கு ஏற்றதாகவும் உள்ள தேஜாஸ் இலகு ரக போர் விமானங்களை இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதேபோல், இந்நிறுவனத்தின் மற்றொரு புகழ்பெற்ற தயாரிப்பாக ஐஎன்எஸ் விக்ராந்த் போர் விமானம் உள்ளது. இந்த விமானங்கள் பெங்களூரு விண்வெளி கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது.
இந்த கண்காட்சிக்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் வந்திருந்தனர். இந்நிலையில், தேஜாஸ் போர் விமானங்களை வாங்க அர்ஜென்டினாவும், எகிப்தும் ஆர்வம் தெரிவித்திருப்பதாக இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் அனந்தகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அர்ஜென்டினா 15 தேஜாஸ் போர் விமானங்களையும், எகிப்து 20 தேஜாஸ் போர் விமானங்களையும் வாங்க ஆர்வம் காட்டி இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இரு நாடுகளைச் சேர்ந்த குழுவினர், விமானத்தில் பறந்து சோதனை செய்ததாகவும் தெரிவித்தார்.
அதோடு, இந்த விமானங்களை நிர்வகிப்பது, பழுதுபார்ப்பது ஆகியவற்றுக்கான நடவடிக்கைகளை தங்கள் நாட்டிலேயே மேற்கொள்ள விரும்புவதாகவும், இதற்கான பயிற்சியை இந்தியா வழங்க வேண்டும் என்றும் எகிப்து கேட்டுக்கொண்டதாகவும், அதற்கும் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் தனது விருப்பத்தை தெரிவித்திருப்பதாகவும் அனந்தகிருஷ்ணன் தெரிவித்தார். இவ்விரு நாடுகள் மட்டுமின்றி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பின்ஸ் ஆகிய நாடுகளும் தேஜாஸ் போர் விமானங்களை வாங்க ஆர்வம் காட்டி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.