சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் வரும் 20ம் தேதி நடைபெறும் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை சர்ச்சை நீடிக்கும் சூழலில், கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் இடைக்காலப் பொதுச் செயலாளராக பழனிசாமி பொறுப்பேற்றார். மேலும், ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கினார். இதை எதிர்த்து பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இதற்கிடையில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில், அதிமுகவில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமிதரப்பில் கே.எஸ்.தென்னரசும்,முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில்முருகனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இரட்டை இலை சின்னத்தை தனக்குஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
இதில், பொதுக்குழு மூலமாக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் பொது வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும். அதுதொடர்பான ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது
இதன்படி, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி தரப்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் தென்னரசை ஆதரித்து 2,501 பொதுக்குழு உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதற்கிடையில், ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வேட்பாளர் செந்தில் முருகன் தனது வேட்பு மனுவை வாபஸ் பெறுவார் என்று அறிவிக்கப்பட்டது. தென்னரசுவிற்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில், பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் வரும் 20ம் தேதி நடைபெறும் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இதில் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல், உச்ச நீதிமன்ற வழக்கு தொடர்பாக ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.