கேரளா: ஊழல் வழக்கில் முதல்-மந்திரியின் முன்னாள் தலைமை செயலாளர் கைது

திருவனந்தபுரம்,

கேரளாவில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான அரசு நடந்து வருகிறது. பினராயி விஜயனின் அரசில் முன்னாள் தலைமை செயலாளராக இருந்தவர் எம். சிவசங்கர். ஐக்கிய அமீரகத்தின் தூதரகத்துக்கு வந்த பார்சல்களில் ரூ.14.82 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கடத்தல் தொடர்பாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் இவருடன் சரித்குமார், சுவப்னா சுரேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கேரளாவில் வீடுகள் இல்லாதவர்களுக்கு வீடு கட்டி தரும் லைப் மிஷன் என்ற திட்டம் பினராயி விஜயன் தலைமையிலான அரசில் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

இதன்படி, திரிச்சூரில் வடக்கன்சேரி பகுதியில் 140 குடும்பங்களுக்கு வீடு கட்டி கொடுக்க முடிவானது. இதற்கான திட்ட செலவான ரூ.20 கோடியில் ரூ.14.50 கோடியை ஐக்கிய அரபு அமீரக தூதரகம் வழியே செஞ்சிலுவை சங்கம் சார்பில் மானிய தொகையாக வழங்கப்பட்ட பணம் செலவிடப்பட்டு உள்ளது.

லாபம் சாரா நோக்குடன் மனிதநேய பணிகளுக்கு உதவிடும் நோக்கில் செஞ்சிலுவை சங்கம் செயல்பட்டு வருகிறது என கூறப்படுகிறது. மீத தொகையை மருத்துவமனை ஒன்றின் கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்படும் என அதற்கான ஒப்பந்தம் தெரிவிக்கின்றது.

இதற்காக யூனிடேக் பில்டர்கள் கட்டுமான ஒப்பந்தம் பெற்று உள்ளனர். எனினும், அதன் எம்.டி. சந்தோஷ் ஈப்பன், திட்டத்திற்காக அனைத்து குற்றவாளிகளுக்கும் சேர்த்து ரூ.4.48 கோடி வரை லஞ்சம் கொடுக்கப்பட்டு உள்ளது என குற்றச்சாட்டு கூறினார்.

இதனை தொடர்ந்து அரசு, விசாரணைக்கு உத்தரவிட்டது. வழக்கில் குற்றவாளியான சரித்குமார், சுவப்னா சுரேஷ் உள்ளிட்டோர் சிவசங்கர் மீது குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர். அவருக்கு பங்கு உள்ளது என தெரிவித்து உள்ளனர். சுவப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் என்பவர் மீதும் குற்றச்சாட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து 3 நாட்கள் விசாரணைக்கு பின்னர், சிவசங்கரை இந்த வழக்கில் அமலாக்க துறை கைது செய்து உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.