கோடம்பாக்கத்தில் பத்தாவது மாடியில் இருந்து கீழே குதித்த மருத்துவ மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை கோடம்பாக்கம் அம்பேத்கர் சாலையில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ராமசுப்பு. ரயில்வேயில் ஏஜிஎம்-ஆக பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர், தற்போது மெட்ரோ ரயில் அட்வைஸ்ஸராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் மூத்த மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. இளைய மகள் நித்யஸ்ரீ (22) கேகே.நகர் இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று காலை வீட்டில் அனைவரும் இருந்த நிலையில், திடீரென வெளியே சென்ற நித்யஸ்ரீ பத்தாவது மாடி படிக்கட்டு ஜன்னலில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த அசோக் நகர் போலீசார், உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முன்னதாக நித்யஸ்ரீ, இது தானே எடுத்த முடிவு எனவும், எனக்கு கிடைத்த அப்பா அம்மா நல்லவர்கள் எனவும் கடிதம் எழுதி வைத்துவிட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கான காரணம் குறித்து அசோக் நகர் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறிப்பு: தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM