துருக்கி, சிரியா ஆகிய நாடுகள் நிலநடுக்கத்தால் உருக்குலைந்து கிடக்கின்றன. பிப்ரவரி 6ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் துருக்கியின் காசியண்டெப் நகரை மையமாக கொண்டு, 17.9 கி.மீ ஆழத்தில் 7.8 ரிக்டர் அளவுகோலில் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதே நாளில் துருக்கியின் காரமன்மராஸ் மாகாணத்தில் மதியம் 1.24 மணிக்கு 7.5 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன்பின்னர் துருக்கியில் 6 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கமும் பதிவானது.
இந்த நிலநடுக்கங்களால் துருக்கியில் ஹடாய், உஸ்மானியே, அதியமான், மாலத்யா, சன்லியுர்ஃபா, அதானா, தியர்பாகிர், கிலிஸ் உள்ளிட்ட 10 நகரங்கள் கடும் பாதிப்பினை சந்தித்துள்ளன. அதேபோல், சிரியாவிலும் அலெப்போ, ஹமா, லாதாகியா ஆகிய பகுதிகளில் நிலநடுக்கத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இரு நாடுகளிலும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை மட்டும் சுமார் 40,000த்தை கடந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாகும் எனவும் அஞ்சப்படுகிறது. லட்சக்கணக்கானோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் சீட்டுக்கட்டுகள் போல சரிந்துள்ளன. இரு நாடுகளிலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி, சிரியா ஆகிய நாடுகளுக்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன. பல்வேறு நாடுகளில் இருந்து மீட்புப் பணிகளுக்காக வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், நிவாரணப் பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி, சிரியா நாடுகளுக்கு நிவாரண உதவி அளிக்கும் ஆப்ரேஷன் தோஸ்த் திட்டத்தை இந்தியா செயல்படுத்தி வருகிறது. சிரியா மற்றும் துருக்கி மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ உதவிகளை வழங்குவதில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகிறது.
துருக்கி மற்றும் சிரியாவுக்கு அவசரகால நிவாரண உதவிகளை வழங்கும் அமைச்சகத்தின் பணிகள் பற்றி மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, “வசுதைவ குடும்பகம் என்ற பண்டைய கால பாரம்பரியத்தின் உணர்வை நிலைநிறுத்தம் வகையில் இரண்டு நாடுகளுக்கும் இந்தியா உதவிகளை அளித்து வருகிறது.” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிப்ரவரி 6-ஆம் தேதி சிரியாவிலும், துருக்கியிலும் இரண்டு கடுமையான நிலநடுக்கங்கள் நிகழ்ந்தபோது உயிர் காக்கும் அவசர மருந்துகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய நிவாரணப் பொருட்கள் 12 மணி நேரங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு பிப்ரவரி 7ஆம் தேதி இந்திய விமானப்படையின் மூலம் சிரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஏறத்தாழ ரூ. 2 கோடி மதிப்பில் 5,945 டன் எடையுள்ள அவசரகால நிதி உதவிப் பொருட்கள் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பிப்ரவரி 10ஆம் தேதி ரூ. 1.4 கோடி மதிப்பில் 7.3 டன் எடையுள்ள நிவாரணப் பொருட்கள் சிரியாவுக்கும், ரூ.4 கோடி மதிப்பிலான உதவி உபகரணப் பொருட்கள் துருக்கிக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. இதன் மூலம் இரு நாடுகளுக்கும் சுமார் ரூ.7 கோடி மதிப்பிலான உயிர் காக்கும் மருந்துகள், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் அவசரகாலப் பொருட்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உரிய நேரத்தில் அனுப்பி வைக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.