கொல்கத்தா: குடும்ப உறுப்பினர்களை பயமுறுத்தி கட்சிக்குள் இழுத்து குடும்பத்தை உடைக்க பாஜக முயற்சி செய்து வருவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சட்டப்பேரவையில் பகிரங்கமான குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது
என்னுடைய சகோதரர் மற்றும்அவருடைய மனைவி ஆகியோரைதங்களது கட்சிக்குள் இழுக்க தேவையான அனைத்து தந்திரங்களையும் பாஜக கையாண்டு வருகிறது. இதற்காக அவர்களை பயமுறுத்தும் வகையில் மிரட்டல்களும் விடுக்கப்படுகின்றன. குடும்பஉறுப்பினர்களை பாஜகவில் சேர்ப்பதன் மூலம் என்னை பலவீனமாக்க பாஜக முயற்சி செய்து வருகிறது.
நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் போன்ற மிகப்பெரும் ஆளுமைகளைக் கூட நீங்கள் (பாஜக) விட்டு வைக்காதது துரதிர்ஷ்டவசமே. இவ்வாறு அவர் கூறினார்.
சாந்திநிகேதனில் 1.38 ஏக்கர் நிலம் மட்டுமே அமர்த்தியா சென்வசம் இருப்பதாகவும், 13 ஏக்கர்நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட் டுள்ளதாகவும் மத்திய அரசு நடத்தும் பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் அவர் மீது குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், இது முற்றிலும் தவறான உள்நோக்கம் கொண்ட குற்றச்சாட்டு என பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் பலமுறை மறுத்துள்ளார்.
இந்த நிலையில், அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நிலம் தொடர்பான ஆவணங்களை அவரிடம் முதல்வர் மம்தா சமீபத்தில் ஒப்படைத்தார்.