மும்பை : மார்ச் 2024ம் ஆண்டுக்குள் சுமார் ரூ.16,500 கோடிக்கு அதிகமான கடன் தொகையை திருப்பி செலுத்த வேண்டிய நெருக்கடிக்கு அதானி குழுமம் தள்ளப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஹிண்டன்பர்க் நிறுவனம் கூறிய முறைகேடு புகார்கள் எதிரொலியாக அதானி குழுமத்தின் சந்தை மதிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சியால் அதன் வர்த்தக சாம்ராஜ்யம் சரிந்து கிடக்கிறது. முதலீட்டாளர்களுக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் பல முக்கியமான முடிவுகளை அதானி குழுமம் மேற்கொண்டு இருந்தாலும் அதற்கு பலன் கிடைப்பதாக தெரியவில்லை. ஏற்கனவே பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பால் ஏற்பட்டுள்ள தடுமாற்றத்தை சமாளிக்க முடியாமல் திணறி வரும் அதானிக்கு திருப்பி செலுத்த வேண்டிய கடன் தொகை கழுத்தை நெறிக்கத் தொடங்கியுள்ளது.
ஜனவரி 2023 முதல் மார்ச் 2024 வரையிலான காலகட்டங்களில் அதானி குழுமம் சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான கடன் தொகையை செலுத்த வேண்டிய நெருக்கடியில் உள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பின் படி அதானி குடும்பம் ஒரே ஆண்டில் ரூ.16,500 கோடி அளவிற்கு கடன் தொகையை திரும்பி செலுத்த வேண்டும். அதானியின் 8 நிறுவனங்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.4 லட்சம் கோடி ஆகும். கடன்களை செலுத்த போதுமான நிதி ஆதாரங்களும் சொத்துக்களும் இருந்தாலும் இந்த கடனுக்கு மறு நிதி அளிப்பு செய்வதில் சவால் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றன. பல்வேறு நிதி அமைப்புகளும் ரேட்டிங் ஏஜன்சிகளும் அதானி குழுமத்தின் மதிப்பீட்டை குறைத்துவிட்டன. இதனால் புதிய கடன் வாங்குவதிலும் ஏற்கனவே வாங்கிய கடனுக்கு மறு நிதி அளிப்பு பெறுவதற்கும் நடப்பு நிதி ஆண்டில் அதானி குழுமத்தின் முன்னே சவால்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.