வாஷிங்டன்: இந்தியா உடனான உறவு மேலும் வலுப்பெற அமெரிக்கா விரும்புவதாக அந்நாட்டின் அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் போயிங் விமான நிறுவனத்திடம் இருந்து டாடா குழுமத்தின் ஏர் இந்தியா விமான நிறுவனம் 290 விமானங்களை வாங்க முடிவு செய்து அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கான அறிவிப்பு முறைப்படி வெளியிடப்பட்டதை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் ஜோ பிடனும் தொலைபேசி வாயிலாக உரையாடினர். அப்போது, இரு தலைவர்களும் பேசியது குறித்து அந்நாட்டு தலைமை செய்தித் தொடர்பாளர் ஜீன் பீர்ரி கூறியதாவது: ”இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமான வியூக முக்கியத்துவம் வாய்ந்த தொழில்நுட்ப உறவு குறித்து இருவரும் விவாதித்தனர்.
இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். இரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த க்வாட் போன்ற சர்வதேச அமைப்புகளில் இணைந்து செயல்படுவது குறித்தும் விவாதித்தார்கள். இந்த ஆலோசனை மிகச் சிறப்பாக இருந்தது.
போயிங் விமான நிறுவனத்திடம் இருந்து ஏர் இந்தியா 200க்கும் மேற்பட்ட விமானங்களை வாங்க இருப்பது குறித்து அதிபர் ஜோ பைடன் பேசினார். அப்போது, இந்த விற்பனை 10 லட்சம் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பை அளித்துள்ளதாக அவர் கூறினார். அமெரிக்காவின் 44 மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் இதனால் பலனடைவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியா – அமெரிக்கா இடையேயான இரு தரப்பு உறவை மேலும் மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.
போயிங் 737 MAX ரகத்தில் 190 விமானங்களையும், போயிங் 787 ரகத்தில் 20 விமானங்களையும், போயிங் 777X ரகத்தில் 10 விமானங்களையும் ஏர் இந்தியா வாங்க உள்ளது. இந்த 220 விமானங்களின் மதிப்பு 34 பில்லியன் டாலராகும். இதுமட்டுமின்றி, போயிங் 737 MAX ரகத்தில் கூடுதலாக 50 விமானங்களையும், 787 ரகத்தில் கூடுதலாக 20 விமானங்களையும் ஏர் இந்தியா வாங்க உள்ளது. இதன் மொத்த மதிப்பு 45.9 பில்லியன் டாலராகும். போயிங் விமான நிறுவனத்திடம் இவ்வளவு எண்ணிக்கையில் விமானங்களை வாங்கும் இரண்டாவது நிறுவனம் ஏர் இந்தியா.” இவ்வாறு அமெரிக்க தலைமை செய்தித் தொடர்பாளர் ஜீன் பெர்ரி தெரிவித்தார்.