அதானி குழுமங்களின் மீதான குற்றச்சாட்டுகளை ஆர்பிஐ, செபி விசாரிக்க வேண்டும்: ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தல்

புதுடெல்லி: அதானி குழுமங்கள் மீதான நிதி முறைகேடு மற்றும் பங்கு கையாளுதல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி ரிசர்வ் வங்கி கவர்னர் செபி தலைவர் ஆகிய இருவருக்கும் காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் கடிதம் எழுதியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ், செபி தலைவர் மதாபி பூரி புச் இருவருக்கும் தான் எழுதிய கடிதங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரிசர்வ் வங்கியின் கவர்னருக்கு எழுதியுள்ள கடிதத்தில், அதானி குழுமத்தின் “அதிகப்படியான கடன் நிலை” இந்திய வங்கி அமைப்புகளை தற்போதும் எதிர்காலத்திலும் பாதிக்காது என்பதை இந்திய ரிசர்வ் வங்கி உறுதி செய்யவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்திய வங்கி முறைகளின் மீது அதானி குழுமத்தின் தாக்கம் என்ன? மற்றும் அந்த நிறுவனத்தின் வெளிநாட்டு நிதி இல்லாமல் திவாலாகிப்போகும் போது, அதற்காக அதானி குழுமம் இந்திய வங்கிகளுக்கு கொடுத்துள்ள வெளிப்படையான, மறைமுக பிணைகளில் இந்திய ரிசர்வ் வங்கி கவனம் செலுத்த வேண்டும்.

நிதி அமைப்புகளின் பொறுப்பாளராக, இந்தியாவின் வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களைப் பாதுகாக்க சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் ரிசர்வ் வங்கி எடுக்க வேண்டும். மேலும், தேசத்தின் நலன் கருதி செல்வாக்கு நிறைந்த ஒரு வணிக நிறுவனத்தின் சட்டவிரோதமான மற்றும் தவறான நிர்வாக விஷயங்களுக்கு இந்தியாவின் வரிசெலுத்துவோர் பணம் பயன்படுத்தப்படக்கூடாது என்பதை உறுதி செய்யவேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

செபியின் தலைவருக்கு எழுதி இருக்கும் கடிதத்தில், அதானி குழுமம் வெட்கமின்றி முறைகேடாக பங்குகளை கையாண்டிருக்கும் விதம் பல்வேறு இந்திய சட்டங்கள் மற்றும் செபியின் விதிமுறைகளுக்கு எதிராக உள்ளது. அதானி குழுமத்தின் எண்ணிக்கை மற்றும் அரசியல் தொடர்புகள் காரணமாக, இதுபோன்ற விசாரணைகள் செல்வாக்கு மிக்க வணிக நிறுவனம் ஒன்றிற்கு ஆதரவாக செயல்படாமல், நேர்மையாகவும் முழுமையாகவும் நடைபெற வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதானி குழுமங்களின் மீதான ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு அல்லது ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் ஹிண்டன்பர்க் அறிக்கை ஆதாரமற்றது என்று அதானி குழுமம் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.