தேனி: தேனியில் உள்ள மதுரை சாலையில் ரயில்வே மேம்பால பணிகள் மேற்கொள்வதற்காக சாலையோர ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றும் பணி துவங்கியது. மதுரையில் இருந்து போடி வரையிலான அகலரயில்பாதை திட்டத்தில் முதல்கட்டமாக தற்போது மதுரையில் இருந்து தேனிவரை கடந்த மே மாதம் 27ம் தேதி முதல் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலை போடியில் இருந்து சென்னைக்கு மிக விரைவில் இயக்கப்பட உள்ளது. ரயில் வரும்போதெல்லாம் தேனி நகரின் முக்கிய சாலைகளாக மதுரை சாலையில் உள்ள ரயில்வே கேட் மற்றும் பெரியகுளம் சாலையில் உள்ள ரயில்வே கேட் மற்றும் பாரஸ்ட் ரோட்டில் உள்ள ரயில்வே கேட் என மூன்று ரயில்வே கேட்டுகள் மூடப்படுகின்றன.
இதனால் ரயில் வந்து செல்லும் போதெல்லாம் தேனியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், தேனி மாவட்டத்தில் தேனி, போடி, சின்னமனூர் கம்பம உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அவசர மருத்துவ சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ்கள் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, முதற்கட்டமாக தேசிய நெடுஞ்சாலைத் துறை மூலம் தேனி நகர் மதுரை சாலையில் உள்ள ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் சுமார் ரூ.80 மதிப்பில் அமைக்க முடிவு செய்யப்பட்டு, இதற்கான பணிகள் துவங்கி உள்ளது. இந்நிலையில், ரயில்வே தண்டபாளத்தை ஒட்டிய பகுதியில் மதுரை சாலையில் சுமார் 100க்கும் அதிகமான வீடுகள், கடைகள் இருந்து வருகின்றன.
இதனை அகற்றவேண்டும் என நெடுஞ்சாலைத் துறை மூலம் பலமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் ஆக்கிரமிப்பு பகுதியில் குடியிருப்போருக்கு அரசின் அடுக்குமாடி குடியிருப்புகளி் வீடுகள் ஒதுக்க முன்னுரிமை அளிக்கப்பட்டது. ஆனாலும், இச்சாலையில் க்கிரமிப்பு பகுதியில் உள்ளவர்கள் வீடுகளை காலி செய்யாமலும், கடைக்காரர்கள் கடைகளை காலி செய்யாமலும் இருந்து வந்தனர். இந்நிலையில் மேம்பாலம் அமைக்க இடையூறாக உள்ள தேனி நகர் மதுரை சாலையில் ரயில்வே தண்டபாளத்தை ஒட்டியுள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையம் அகற்றும் பணியில் தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்பகுதியில் உள்ள குடியிருப்பாளர்கள், கடைக்காரர்கள் நேற்று திடீரென சாலைமறியல் செய்தனர். இதனையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் நடத்தியவர்கள் கலைந்தனர். இதனையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.