தேனி மாவட்டம் மேகமலை, வருசநாடு மலைப்பகுதிகளில் புலி, சிறுத்தை, கரடி, காட்டுமாடு, மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனஉயிர்கள் அதிகம் உள்ளன. வருசநாடு வனப்பகுதியை ஒட்டிய, கணவாய் வனப்பகுதி, கோம்பைக்காடு வனப்பகுதிகளிலும் கரடி, காட்டுப்பன்றிகள் அதிகம் உள்ளன.
ஆண்டுதோறும் கோடைக்காலத்தின்போது கரடி, காட்டுமாடு உள்ளிட்ட வன விலங்குகள் மலைப்பகுதியையொட்டிய விளைநிலங்களில் தண்ணீர் மற்றும் உணவு தேடி வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது கோடைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், கோம்பைக்காடு வனப்பகுதியையொட்டிய விவசாய நிலங்கள் உள்ளன. அதில் குருவேந்திரன் தோட்டத்து வீடு வழியாக வந்த கரடியை நாய் குரைத்து விரட்டியுள்ளது. இதனால் அவரின் வீட்டுக்குள் கரடி புகுந்துவிட்டது.
அந்த நேரத்தில் யாரும் வீட்டுக்குள் இல்லை. தொடர்ச்சியாக நாய் குரைத்ததை வைத்து சுதாரித்துக்கொண்ட குருவேந்திரன் குடும்பத்தினர் வீட்டுக்குள் எட்டிப்பார்த்தபோது கரடி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கரடி வெளியே வந்தால் தங்களை தாக்கிவிடுமோ என்ற அச்சத்தில் அவர்கள் கரடியை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டனர். இதையடுத்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
வனச்சரக அலுவலர் அருண்குமார், தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன், கால்நடை மருத்துவர் பாலசுப்பிரமணியம் உட்பட 20 பேர் கொண்ட குழுவினர் கரடியை கூண்டு வைத்து பிடிக்க முயன்றனர். அந்தக் கூண்டில் பழங்கள், தேன் போன்ற கரடிக்குப் பிடித்த உணவுகளை வைத்தனர். ஆனாலும், வீட்டுக்குள் படுத்துக்கொண்ட கரடி கதவுக்கு முன் வைக்கப்பட்ட கூண்டுக்கு வரவில்லை. இதையடுத்து வெடி வைக்கப்பட்டதில் வீட்டுக்குள் அங்கும் இங்கும் ஓடிய கரடி கடைசியாக கூண்டுக்கள் ஏறி சிக்கியது. பிறகு, கோபமடைந்த கரடி கூண்டின் கம்பிகளை உடைக்க முயன்றது. இதைப் பார்த்த மருத்துவர்கள் கரடிக்கு மயக்கமருந்து செலுத்தினர். பிறகு, பாதுகாப்பான முறையில் கரடியை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடப்பட்டது.
இதுகுறித்து வனத்துறையினரிடம் விசாரித்தோம். “வனப்பகுதியில் கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. ஆனால், இதுவரை மனிதர்களுக்கு எவ்வித இடையூறும் கொடுத்தது இல்லை. கோடைக்காலத்தின்போது தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக விளைநிலங்களைத் தேடி வனவிலங்குகள் வரும். அதைத்தடுக்க வனப்பகுதிகளில் தண்ணீர்த் தொட்டிகள் அமைக்க ஏற்பாடு செய்யவுள்ளோம்.
தற்போது பிடிக்கப்பட்ட மூன்று அடி உயரமுள்ள பெண் கரடிக்கு 17 வயது இருக்கும். கூண்டு வைத்தபோதும் அதில் ஏறாமல் வீட்டைவிட்டு வெளியேற மறுத்தது. இதனால் 8 மணி நேரம் கரடியைக் கூண்டுக்குள் ஏறவைக்க போராடினோம். கடைசியாக வீட்டின் பின்புறம் வெடிவைத்தோம். அந்தச் சத்தத்தால்தான் கரடி கூண்டுக்குள் ஏறியது. கூண்டுக்குள் சிக்கியதை அடுத்து கம்பிகளைக் கடித்தும், கால்களால் உதைத்தும் வெளியேற முயன்றது. இதில் கரடிக்கு வாய்ப் பகுதியில் ரத்தக்கசிவு ஏற்பட்டது. அதற்கு முதலுதவி அளிக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் வனப்பகுதிக்குள் கொண்டு சேர்த்துவிட்டோம்” என்றனர்.