ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம், மாநிலத்துக்கும், மக்களுக்கும் பயன் அளிக்கும் வகையில் இருக்கும் என குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தெரிவித்தார்.
குஜராத் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைத்த நிலையில், முதல்வராக பொறுப்பேற்றவர் பூபேந்திர படேல். பிரதமர் நரேந்திர மோடிகுஜராத்தின் முதல்வராக இருந்தபோது செயல்படுத்திய பல திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வரும் பூபேந்திர படேல், காந்தி நகரில் உள்ள தனது இல்லத்தில் நேற்று முன்தினம், குஜராத் அரசின் விருந்தினர்களாகச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆரவள்ளி மாவட்ட ஆட்சியரும் தமிழருமான எம்.நாகராஜன், வருவாய்த் துறைச் செயலர் மற்றும் நில சீர்திருத்தத் துறை ஆணையருமான பி.ஸ்வரூப் ஆகியோர் விளக்கினர்.
தொடர்ந்து பேசிய, குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல், மாநில வளர்ச்சித் திட்டங்கள், பல்வேறு துறைகளில் தன்னிறைவு பெற்ற குஜராத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார். தொடர்ந்து தமிழ் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
அப்போது அவர் கூறியது: குஜராத் மாநிலத்தில் நிதி மோலாண்மை சிறப்பாக கையாளப்படுகிறது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. பிரதமர் மோடி குஜராத்தின் முதல்வராக இருந்தபோது செயல்படுத்தி வந்த, முன்னெடுத்த திட்டங்கள் காரணமாக மாநிலம் மின் மிகை மாநிலமாக உள்ளது. குறிப்பாக புதுப்பிக்கத் தக்க எரிசக்தி பயன்பாடு அதிகரித்து அதன் மூலம் இந்த இலக்கு எட்டப்பட்டுள்ளது. நாங்கள், இதர மாநிலங்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகிறோம்.
மத்திய அரசு முயற்சி எடுத்துள்ள ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் மக்களுக்கும், மாநிலங்களுக்கும் பயனளிப்பதாக இருக்கும். இதை நான் வரவேற்கிறேன். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்கு வருவதில் மொழி தடையாக உள்ளது. ஆனால், எனக்கு தமிழகத்தின் தோசை மிகவும் பிடிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.