டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முதன்முறையாக தனது கார்களில் பாதுகாப்பு சார்ந்த ADAS (advanced driver assistance systems) நவீன நுட்பத்தை ஹாரியர் மற்றும் சஃபாரி கார்களில் கொண்டு வந்துள்ள நிலையில் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது.
இரண்டு எஸ்யூவி கார்களும் ADAS மற்றும் புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற கூடுதல் அம்சங்களைப் பெறுகிறது.
2023 டாடா ஹாரியர், சஃபாரி
2023 ஆட்டோ எக்ஸ்போவில் புதுப்பிக்கப்பட்ட டாடா ஹாரியர் மற்றும் டாடா சஃபாரி கார்களில் ரெட் டார்க் பதிப்பை காட்சிப்படுத்தியது. 2023 மாடல் வெளிப்புறத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை பெறவில்லை, இருப்பினும், கேபினுக்கு நவீன வசதிகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பை பெறுகிறது. தற்போதைய 8.8-இன்ச் டிஸ்ப்ளேவில் புதிய 10.25-இன்ச் சிஸ்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. புதிய இயங்குதளம் கிடைக்கும் மற்றும் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே இணைப்பு மற்றும் iRA இணைக்கப்பட்ட வாகன தொழில்நுட்பம் போன்ற கிட்களை தொடர்ந்து வழங்கும். இந்த அமைப்பு 6 மொழிகளில் 200+ குரல் கட்டளைகளை செயல்படுத்த இயலும்.
ADAS சிஸ்டத்தின் மூலம் 2023 ஹாரியர் மற்றும் சஃபாரி கார்களில் முன்புற மற்றும் பின்புற மோதல் எச்சரிக்கை, ஆட்டோமேட்டிக் அவசரகால பிரேக்கிங், போக்குவரத்து எச்சரிக்கை அங்கீகாரம், உயர் பீம் அசிஸ்ட், பிளைண்ட் ஸ்பாட் மற்றும் பின்புறத்தில் போக்குவரத்து கண்காணிப்பு, கதவு திறக்கும் போது எச்சரிக்கை மற்றும் லேன் மாறுபாடு எச்சரிக்கை ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
மஹிந்திரா XUV700 மற்றும் MG ஹெக்டர் போன்ற போட்டியாளர்கள் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், டிராஃபிக் ஜாம் அசிஸ்ட் மற்றும் ஸ்மார்ட் பைலட் (ஸ்டீரிங் அசிஸ்ட்) போன்ற கூடுதல் செயல்பாடுகளை வழங்குகிறார்கள் என்பது இங்கே குறிப்பிடதக்கதாகும்.
பாதுகாப்பு அம்சங்களில் 6 ஏர்பேக்குகள், ESC, ABS, ஆட்டோ ஹோல்டு வசதியுடன் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகள், கார்னரிங் விளக்குகள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் மலை இறங்கும் கட்டுப்பாடு ஆகியவை அடங்கும்.
கூடுதல் அம்சங்களில் 360-டிகிரி கேமரா, நினைவக செயல்பாட்டுடன் இயங்கும் டிரைவர் இருக்கை, காற்றோட்டமான முன் இருக்கைகள், ஆட்டோ ஹெட்லேம்ப்கள் மற்றும் வைப்பர்கள் மற்றும் காற்று சுத்திகரிப்பு ஆகியவற்றை கொண்டுள்ளது. சஃபாரி கூடுதலாக இரண்டாவது வரிசையில் உள்ள பனோரமிக் சன்ரூஃப், இருக்கைகளின் ஓரங்களில் மூட் லைட்டிங்கில் உள்ளது.
ஹாரியர் மற்றும் சஃபாரி BS6 இரண்டாம் கட்ட மாசு உமிழ்வு விதிமுறைகளை பூர்த்தி (RDE) செய்யும் புதிய தலைமுறை Kryotec 2.0 லிட்டர் டீசல் என்ஜினை பெறும். 168 பிஎச்பி மற்றும் 350 என்எம் டார்க்கை உருவாக்கும் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் வழங்கப்படும். மேனுவல் வேரியண்ட் லிட்டருக்கு 16.35 கிமீ மைலேஜ் தரும் மற்றும் ஆட்டோமேட்டிக் 14.6 கிமீ லிட்டருக்கு தரக்கூடும் என டாடா கூறுகிறது,
அடுத்த சில வாரங்களில் 2023 டாடா சஃபாரி மற்றும் டாடா ஹாரியர் விற்பனைக்கு வரவுள்ளது.