சேலம்: அரசு அலுவலகங்களை நாடிவரும் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்வதுடன், அவர்களுக்கு பொறுப்பாக பதில் அளிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
‘கள ஆய்வில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்கள், அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்ஆர்கே.பன்னீர்செல்வம், உதயநிதி ஸ்டாலின், காந்தி, மதிவேந்தன், தலைமைச் செயலர் இறையன்பு, அரசு செயலர்கள் பிரபாகர், சந்தீப் சக்சேனா, சிவ்தாஸ் மீனா, குமார் ஜெயந்த், உதயசந்திரன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மக்கள் தங்கள் குறைகளை நீக்க வலியுறுத்தி அளிக்கும் மனுக்களை வெறும் காகிதங்களாகப் பார்க்காமல், ஒருவரின் எதிர்காலமாகக் கருத வேண்டும். இதன் முக்கியத்துவத்தை முன்னிறுத்தி ‘முதல்வரின் முகவரி’ என்ற துறை உருவாக்கப்பட்டுள்ளது.
பட்டா மாறுதல் உத்தரவுகள், எவ்வித அலைக்கழிப்புமின்றியும், தாமதமின்றியும் வழங்கப்படுவதை மாவட்ட ஆட்சியர்களும், வருவாய் அதிகாரிகளும் உறுதி செய்ய வேண்டும். குடியிருக்க வீடு, சாலை, குடிநீர், தெருவிளக்கு, பள்ளி, சுகாதாரம் உள்ளிட்டவற்றைத் தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர். இவற்றை தரமாக வழங்குவதில் என்ன சிரமம் ஏற்பட்டாலும், அவற்றைக் களைந்து, திட்டத்தில் முன்னேற்றம் காணுங்கள்.
விவசாயிகள், சிறுதானிய உற்பத்தியாளர்கள், மதிப்புக்கூட்டு பொருட்கள் உற்பத்தியாளர்கள் ஆகியோர் சில கருத்துகளைத் தெரிவித்தனர். அவற்றை வேளாண் துறைச் செயலரும், ஆட்சியர்களும் கவனத்தில்கொண்டு, செயல்பட வேண்டும். விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த வேண்டும். எனவே, வேளாண் திட்ட செயலாக்கங்களுக்கு முன்னுரிமை அளித்திடுங்கள்.
வேகமாக வளர்ந்து வரும் சேலம், ஓசூர் மாநகராட்சிகள் மற்றும் பல நகராட்சிப் பகுதிகளில் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எனவே, குப்பை அகற்றம், கழிவுநீர் வெளியேற்றம், சாலைகளைச் சீரமைத்தல், கல்வி, சுகாதாரம் போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
ஆதிதிராவிடர், பழங்குடியினர், விளிம்புநிலை மக்களுக்கான நலத் திட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவர்களுக்கான வீட்டுவசதி, தொழில்முனைவோர் திட்டங்கள், கல்வி உதவித்தொகை வழங்குதல் ஆகியவற்றைக் கண்காணிக்க வேண்டும்.
அரசு அலுவலகங்களை நாடிவரும் பொதுமக்களிடம் கனிவாக நடந்துகொள்வதுடன், அவர்களது கோரிக்கைகள் தொடர்பாக மிகுந்த பொறுப்புடன் பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
மாவட்ட ஆட்சியர்கள் கார்மேகம் (சேலம்), ஸ்ரேயா பி.சிங் (நாமக்கல்), சாந்தி (தருமபுரி), தீபக் ஜேக்கப் (கிருஷ்ணகிரி) மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.